முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் பஸ் மறியல்

உசிலம்பட்டி, சோழவந்தான் பகுதிகளில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் பஸ் மறியல்

Update: 2017-07-17 22:00 GMT

உசிலம்பட்டி

உசிலம்பட்டி அருகே உள்ள குருவிளாம்பட்டியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகிக்கப்படவில்லை என்றும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கிராம மக்கள் பல முறை புகார் தெரிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலை உசிலம்பட்டி–பேரையூர் சாலையில் உள்ள குருவிளாம்பட்டி விலக்கில் பஸ் மறியலில் ஈடுபட்டனர்.

அதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் இளங்கோவன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் குருவிளாம்பட்டி கிராமத்திற்கு உடனடியாக குடிநீர் கிடைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து பஸ் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் உசிலம்பட்டியிருந்து பேரையூர், எழுமலை செல்லும் சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சோழவந்தானை அடுத்த திருவேடகம் ஆதிதிராவிடர் காலனி பகுதியில் கடந்த சில நாட்களாக சரிவர குடிநீர் வினியோகிக்கப்படாததால் இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் அதன்பேரில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் நேற்று அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் காலிக்குடங்களுடன் சோழவந்தான்–திருமங்கலம் சாலையில் திடீர் சாலையில் அமர்ந்து பஸ் மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது சில இளைஞர்கள் மதுபோதையில் அந்த வழியாக சென்ற அரசு பஸ் டிரைவரையும், பயணிகளையும் தகாத வார்த்தைகளால் திட்டி பஸ்சை தாக்கினராம். அதைத்தொடர்ந்து பள்ளி உள்பட அனைத்து வாகனங்களும் சாலையின் இருபுறம் நீண்ட வரிசையில் நின்றன. தகவலறிந்து வந்த சோழவந்தான் போலீசார், வட்டார வளர்ச்சி அலுவலர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அதில் விரையில் முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். அதைத்தொடர்ந்து அரசு பஸ் டிரைவர், பயணிகளிடம் குடிபோதையில் தகராறு செய்தவர்களை கைது செய்யக்கோரி அரசு போக்குவரத்து ஊழியர்கள் போலீசாரிடம் வலியுறுத்தி பேசினர். இந்த பிரச்சினைகளால் அந்த வழியாக சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்