பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி நாகையில் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-07-17 22:15 GMT

நாகப்பட்டினம்,

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு, தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு ஆகியவை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திட்ட தலைவர் சிவராஜன் தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர்கள் கண்ணன் (சீர்காழி), சிவக்குமார் (நாகை), இளவரசன் (மயிலாடுதுறை) ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யூ. நாகை மாவட்ட துணை தலைவர் நாகைமாலி, மாவட்ட செயலாளர் சீனிமணி, தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பு மாநில செயலாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில், அனைவருக்கும் 1.12.2015 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும். களப்பிரிவு, கணக்கீட்டு, கணக்குப்பிரிவு ஊழியர்களின் பதவி உயர்வில் உள்ள தேக்க நிலையை அகற்ற வேண்டும்.

விடுபட்ட ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். விடுபட்ட பகுதி நேர பணியாளர்களுக்கு காலநிலை ஊதியம் வழங்க வேண்டும். 3.11.2010–ல் உயர்நீதிமன்றம் அளித்த இடைக்கால தீர்ப்பின் அடிப்படையில் ஓய்வூதியம் தொடர்ந்து வழங்க வேண்டும். முத்தரப்பு ஒப்பந்தம் மூலம் ஊழியர்கள், ஓய்வூதியர்கள் நலன்களை காக்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை மின் வாரிய ஓய்வூதியர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பை சேர்ந்த ராஜேந்திரன், திட்ட தலைவர் கணபதி, கோட்ட செயலாளர் திருநாவுக்கரசு, மின் ஊழியர் மத்திய அமைப்பு திட்ட செயலாளர் கலைசெல்வன், திட்ட பொருளாளர் செந்தில்குமார், திட்ட துணை தலைவர் வேல்முருகன், அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் பழனிவேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்