மணப்பாறை பகுதியில் வெடிக்காத ராணுவ குண்டுகளால் மீண்டும் ஆபத்து

மணப்பாறை பகுதியில் வெடிக்காத ராணுவ குண்டுகளால் மீண்டும் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளதால் மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

Update: 2017-07-16 22:15 GMT
திருச்சி

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வீரப்பூர் அருகே உள்ள வீரமலைப்பகுதியில் வருடத்தில் சில நாட்கள் இந்திய ராணுவத்தின் பல்வேறு சிறப்பு படை பிரிவினர் மற்றும் இந்தோ– நேபாள் படை பிரிவினர் முகாமிட்டு துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவது வாடிக்கையான ஒன்றாகும். கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த துப்பாக்கி சுடும் பயிற்சியானது இங்கு நடைபெற்று வருகிறது. மலையில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு முன்பே முகாம் அமைத்து அந்த இடத்தில் இருந்து தான் துப்பாக்கி சுடும் பயிற்சியானது நடைபெறும்.

வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் துப்பாக்கி சுடும் பயிற்சி நடப்பதால் அதனை யாரும் பொருட்படுத்துவது கிடையாது. மாவட்ட கலெக்டர் விடுக்கும் வேண்டுகோளின்படி அந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் இருக்காது. கால்நடைகளையும் மேய்ச்சலுக்கு அனுப்ப மாட்டார்கள். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 29–ந்தேதி மணப்பாறையை அடுத்த பொத்த மேட்டு பட்டியில் பழைய இரும்பு கடை ஒன்றில் குண்டு போன்ற ஒரு பொருளை உடைக்க நடந்த முயற்சியில் மாரியப்பன் என்ற தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் நடத்திய விசாரணையின்போது தான் பழைய இரும்பு கடையில் வெடித்தது ராணுவத்தினர் பயன்படுத்தும் குண்டு என்பது தெரியவந்தது. அதன் பின்னர் இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து உள்ளது.

குண்டு வெடித்த பழைய இரும்புக் கடையில் இருந்து 24 வெடிக்காத ராணுவ குண்டுகளும், அதைத் தொடர்ந்து மலைப்பகுதியில் முதலில் பலவகையான வெடிக்காத ராணுவ குண்டுகள் 26–ம் அதைத் தொடர்ந்து மத்தகோடங்கிப்பட்டி பின்புறமுள்ள வீரமலைப்பகுதியில் சுமார் 14 கிலோ எடையுள்ள பெரிய அளவிலான ராணுவ குண்டும், மேலும் 3 குண்டுகள் என ஏராளமான குண்டுகளை போலீசார் கைப்பற்றினர்.

ராணுவத்தினர் துப்பாக்கி சுடும் பயிற்சி நடத்தும்போது வெடிக்காத குண்டுகள் எதுவும் உள்ளதா? என வனப்பகுதியில் ஆய்வு செய்வது கிடையாது. அப்படி ஆய்வு செய்திருந்தால் இதுபோன்ற விபரீதம் நடந்து இருக்காது. எனவே வீரமலை பகுதியில் இன்னும் வெடிக்காத குண்டுகள் ஏராளமாக மறைந்து கிடக்கலாம். அப்படிப்பட்ட குண்டுகளை கண்டுபிடித்து அவற்றை செயலிழக்க செய்தால் தான் வீரமலை பகுதியில் பொதுமக்களும், கால்நடைகளும் பயம் இன்றி சுதந்திரமாக நடமாட முடியும். இல்லை என்றால் எந்த நேரமும் மீண்டும் ராணுவ குண்டுகள் வெடித்து ஆபத்தை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் அந்த பகுதி மக்களிடையே உள்ளது.

வீரமலைப்பகுதியில் முழுமையான தேடுதல் வேட்டை நடைபெறவில்லை. ஏனென்றால் முட்கள், புதர்கள் நிறைந்த பகுதி என்பதாலும், பாதை இல்லை என்பதாலும் மலைக்குள் உள்ளே செல்ல முடியாத நிலை உள்ளது. தற்போது வரை ஏராளமான குண்டுகள் கைப்பற்றப்பட்டு இருந்தாலும் கூட இன்னும் மலைப்பகுதியில் வெடிக்காத நிலையில் குண்டுகள் இருப்பதாக அந்த பகுதிக்கு செல்லும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதுமட்டுமின்றி ஒரு சிலரின் கிணறுகளிலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் போடப்பட்ட வெடிக்காத குண்டுகளும் கிடப்பதாகவும் கூறப்படுகின்றது.

எனவே பொதுமக்கள் அச்சத்தில் இருந்து விடுபட மாவட்ட கலெக்டர், வீரமலை பகுதிக்கு வந்து நேரடி ஆய்வு நடத்தி தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது அந்த பகுதி மக்களின் கோரிக்கை ஆக உள்ளது.

மேலும் செய்திகள்