ரஜினி, கமல் பற்றி பேசினால் சர்ச்சையாகிறது சரத்குமார் வேதனை

ரஜினி, கமல் பற்றி பேசினால் சர்ச்சையாகிறது, ஆனால் நாட்டு நலனை பற்றி பேசினால் வெளியே தெரிவதில்லை என சரத்குமார் வேதனையுடன் தெரிவித்தார்.

Update: 2017-07-16 21:33 GMT

மும்பை,

மராட்டிய மாநில சமத்துவ மக்கள் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் பெருந்தலைவர் காமராஜர், சரத்குமார் பிறந்த நாள் விழா ஆகியவை நேற்று காலை தாராவியில் உள்ள காமராஜர் பள்ளியில் நடந்தது. விழாவிற்கு கட்சியின் தலைவர் சரத்குமார் தலைமை தாங்கினார். மராட்டிய மாநில செயலாளர் ராஜ்குமார், இளைஞரணி துணை செயலாளர் மலையரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவிஞர் செந்தூர்நாகராஜன் அனைவரையும் வரவேற்று பேசினார். தொடர்ந்து நிர்வாகிகள் சமத்துவ மக்கள் கட்சியின் உறுதிமொழியை ஏற்றனர். இதையடுத்து துணை பொதுச்செயலாளர் சுந்தர் கட்சியினர் எப்படி செயல்பட வேண்டும், கட்சியை வளர்க்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்து நிர்வாகிகளிடம் விளக்கமாக கூறினார். பின்னர் பேசிய கொள்கை பரப்பு செயலாளர் விவேகானந்தன் சேலத்தில் நடைபெற உள்ள கட்சியின் மாநாட்டிற்கு பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என மராட்டிய மாநில தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார்.


இதையடுத்து சரத்குமார் பேசியதாவது:–

கடந்த 2½ ஆண்டுகளாக பல சோதனைகளை சந்தித்து வருகிறோம். சறுக்கல்கள் இல்லாமல் வாழ்வில் வெற்றி பெற முடியாது. இன்று பல இளைஞர்கள் சின்ன தோல்விகளை கூட தாங்கி கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அப்படி பார்த்தால் நானெல்லாம் 1000 முறை தற்கொலை செய்து இருக்க வேண்டும். நாம் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். தோல்வியடையாமல் யாரும் வெற்றி பெற்றிருக்க முடியாது. பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி இந்தியாவிலேயே பொற்கால ஆட்சி. இதை யாராலும் மறுக்கவும், மறைக்கவும் முடியாது. எனவே அவர் வழியை பின்பற்றி நாமும் நடக்க வேண்டும். தொண்டர்கள் சிவப்பு, மஞ்சள் துண்டுடன், கட்சி அடையாள அட்டையுடன் வெளியில் செல்வதை பெருமையாக கருத வேண்டும். அப்போது கட்சி வளரும்.

இன்று தமிழகத்தில் பலர் நான் தான் அடுத்த முதலமைச்சர் என்று சொல்கிறார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் அந்த தகுதி இருக்கிறதா?. நமக்கு (சமத்துவ மக்கள் கட்சிக்கு) ஆட்சி புரிகிற தகுதி வரும். அதற்காக நீங்கள் உழைக்கவேண்டும். ஜல்லிகட்டிற்காக முதலில் போராடியது சமத்துவ மக்கள் கட்சி. கூடங்குளம் அணு ஆலைக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தியது நாம். விவசாயத்திற்கு தனி பட்ஜெட் போட வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இதெல்லாம் வெளியே தெரிவதில்லை. ரஜினி, கமலை பற்றி பேசினால் சர்ச்சையாகிறது. ஆனால் நாட்டு, நலன், தமிழர் நலனை பற்றி பேசினால் வெளியே தெரிவதில்லை.

தொண்டர்கள் நேர்மையுடன் மக்கள் நலப்பணியில் ஈடுபட வேண்டும். அப்போது தான் ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியும். யாரும் கெட்ட பழக்கவழக்கத்திற்கு அடிமையாக வேண்டாம். உடல்நலனை பாதுகாத்து கொள்ளுங்கள். உலகம் பேசும் அளவில் விருதுநகரில் காமராஜர் மணி மண்டபம் கட்டப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்