ராசிபுரம் அருகே பணத்தை திருப்பி கேட்டதால் கிணற்றில் குதித்த வாலிபர்

ராசிபுரம் அருகே பணத்தை திருப்பி கேட்டதால் கிணற்றில் குதித்த வாலிபர் போலீசார்–தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டனர்

Update: 2017-07-16 22:15 GMT

ராசிபுரம்,

ராசிபுரம் தாலுகா ஆயில்பட்டி போலீஸ் சரகம் பிலிப்பாகுட்டை அருகேயுள்ள பெத்தநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் வேலு (வயது 30). இவர் நேற்று ராசிபுரம் அருகே உள்ள தொட்டியம்பட்டியைச் சேர்ந்த ஒருவரது தோட்டத்தில் 90 அடி ஆழ கிணற்றில் குதித்து உள்ளார். அந்த கிணற்றில் 3 அடி தண்ணீர் இருந்தது.

இதுபற்றி ராசிபுரம் போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் கிடைத்தது. அதன்பேரில் ராசிபுரம் தீயணைப்பு படை அதிகாரி ராதாகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு படையினர், ராசிபுரம் போலீசார், கோனேரிப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் பூபதி ராஜா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு படையினர் கயிறு கட்டி வேலுவை உயிருடன் மீட்டனர். வேலுக்கு உடலில் காயம் ஏற்படவில்லை. பின்னர் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுபற்றி ராசிபுரம் போலீசார் விசாரணை நடத்தினர்.

போலீசார் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.

வேலு, காரவள்ளி புதுக்காலனி, கொல்லிமலை ஆகிய இடங்களில் உள்ள சிலரிடம் வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி பணத்தை வாங்கியதாக கூறப்படுகிறது. பணம் கொடுத்தவர்கள் வேலுவிடம் திருப்பி கேட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று அவர்கள் வேலுவிடம் பணத்தை கேட்பதற்காக நாமகிரிபேட்டைக்கு வந்துள்ளனர். ராசிபுரம் அருகேயுள்ள தொட்டியப்பட்டியைச் சேர்ந்த விவசாயி வீட்டுக்கு அவர்களை வேலு அழைத்துச் சென்றார். அங்கு அவர்கள் அனைவரும் பேசிக்கொண்டிருந்தபோது வேலு சிறுநீர் கழித்துவிட்டு வருவதாக கூறிவிட்டுச் சென்றதாக தெரிகிறது. அப்போது அவர்கள் அவரை பின் தொடர்ந்து சென்றதாக தெரிகிறது. திடீரென வேலு 90 அடி ஆழம் உள்ள கிணற்றில் குதித்துவிட்டார்.

மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகள்