ஜிஎஸ்டி வரிவிதிப்பை கண்டித்து சங்கரன்கோவிலில் 12–வது நாளாக விசைத்தறி உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

சங்கரன்கோவிலில் 12–வது நாளாக விசைத்தறி உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் ஜிஎஸ்டி வரிவிதிப்பை கண்டித்து தொடர் போராட்டம்

Update: 2017-07-16 22:30 GMT

சங்கரன்கோவில்,

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் கரிவலம்வந்தநல்லு£ர், சுப்புலாபுரம், சிந்தாமணி பகுதிகளில் உள்ள விசைத்தறி உற்பத்தியாளர்கள் மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை (ஜி.எஸ்.டி.) வரிவிதிப்பிலிருந்து முழு விலக்கு வேண்டி நேற்று 12–வது நாள்களாக தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் நாள் ஒன்றுக்கு 1 கோடி வீதம் 12 நாளில் 12 கோடி மதிப்பிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டது.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக நெசவு தொழில் விளங்கி வருகிறது. இதில் சங்கரன்கோவில் நகரில் மட்டும் 5 ஆயிரத்திற்கும் அதிகமாக விசைத்தறி கூடங்களில் 10 ஆயிரத்திற்கும் அதிகமாக தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

சங்கரன்கோவில் விசைத்தறி கூடங்களில் சேலை, கைலி, துண்டு, வேஷ்டி ஆகிய துணி வகைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கிருந்து சேலம், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் துணி வகைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சங்கரன்கோவிலில் நாள் ஒன்றுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான துணிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில், மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை(ஜி.எஸ்.டி.) வரி விதிப்பை கண்டித்து, கடந்த ஜுன் 15–ம் தேதி விசைத்தறி உற்பத்தியாளர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து 27–ந் தேதி முதல் 3 நாள்கள் வேலை நிறுத்த போராட்டம் செய்தனர். நான்கு நாள் நடைபெற்ற வேலைநிறுத்த போராட்டத்தால் ரூ 4 கோடி மதிப்பிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம், திருமுருகன் சிறு விசைத்தறி கூலி தொழிலாளர் சங்கம், விசைத்தறி தொழிலாளர்கள் சங்கம், சிந்தாமணி வட்டார விசைத்தறி நெசவாளர் சங்கம், சுப்புலாபுரம் அறிஞர் அண்ணா சிறு விசைத்தறி உற்பத்தியாளர் சங்கம் சார்பில் கடந்த 5–ந் தேதியிலிருந்து தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம், பேரணி ஆகிய போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.

நேற்று வரை 12 நாள்களாக நடைபெற்று வரும் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தால் ரூ.12 கோடி மதிப்பிலான துணி உற்பத்தி பாதிக்கபட்டுள்ளது. நேற்று மதியம் சங்கரன்கோவில் ரெயில்வே பீடர் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சங்கரன்கோவில், அருப்புக்கோட்டை விசைத்தறி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் சங்கம் சார்பில் விசைதறி தொழிலில் ஜிஎஸ்டி சட்டம் தொடர்பான விளக்கக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் விசைத்தறி உரிமையாளர்கள் ராமநாதன், சுப்பிரமணியன், முத்துசங்கரநாராயணன், கணேசன், குமார், தொழிலாளர்கள் சங்கம் சார்பில் அசோக்ராஜ், மாணிக்கம் மற்றும் சங்கரன்கோவில், சிந்தாமணி, சுப்புலாபுரம் ஆகிய பகுதிகளிலிருந்து ஏராமானவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விசைத்தறி தொழிலாளர்களின் போராட்டம் தொடர்வதா? அல்லது வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் மட்டும் பணியில் ஈடுபடுவதா? என்பது குறித்து வருகிற புதன்கிழமை(19–ந் தேதி) அன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும், அதுவரை தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்