பெரியகுளம் அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல்
பெரியகுளம் அருகே கடந்த 20 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
பெரியகுளம்,
பெரியகுளம் அருகே எண்டப்புளி ஊராட்சிக்கு உட்பட்ட ஆரோக்கியமாதா நகர் மற்றும் அருளானந்த நகர் பகுதிகளில் கடந்த 20 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் கும்பக்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவில்லை என்று கூறி ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இது குறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் பாரதமணி மற்றும் பெரியகுளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
பின்னர் அவர்கள், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். மறியல் காரணமாக சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் கும்பக்கரை அருவிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர்.