கும்பகோணம் பள்ளி தீ விபத்து: 13–ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

கும்பகோணத்தில் நடந்த பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் பலியானார்கள். இந்த தீ விபத்தின் 13–ம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில் பலியான குழந்தைகளின் பெற்றோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

Update: 2017-07-16 22:30 GMT

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் கடந்த 2004–ம் ஆண்டு ஜூலை மாதம் 16–ந் தேதி பயங்கர தீ விபத்து நடந்தது. இதில் பள்ளியில் படித்த 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர். 18 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் நடந்து 13–வது ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நேற்று காலை குழந்தைகளை இழந்த பெற்றோர் தங்களுடைய வீட்டில் குழந்தைகளின் படங்களுக்கு மாலை அணிவித்து, அவர்களுக்கு பிடித்த உணவு பொருட்களை படையலிட்டனர்.

பின்னர் தீ விபத்து நடந்த கிருஷ்ணா பள்ளிக்கு வந்த பெற்றோர், பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த 94 குழந்தைகளின் உருவப் படங்கள் அடங்கிய பேனருக்கு மாலை அணிவித்து, கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அதேபோல தீ விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள், பலியானவர்களின் உறவினர்களும் பள்ளி வளாகத்தில் குழந்தைகளின் உருவப்படங்களுக்கு மலர் தூவியும், மெழுகு வர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர்.

அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கும்பகோணம் உதவி கலெக்டர் பிரதீப்குமார், தாசில்தார் மாணிக்கராஜ், நகராட்சி ஆணையர் உமாமகேஸ்வரி ஆகியோர் குழந்தைகளின் உருவப்படங்கள் முன்பாக மலர் வளையம் வைத்தனர். அதேபோல் அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் ரெங்கசாமி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ராம.ராமநாதன், முன்னாள் நகரசபை தலைவர் ரத்னாசேகர், ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சோழபுரம் அறிவழகன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், அன்பழகன் எம்.எல்.ஏ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட குழு உறுப்பினர்கள் சின்னை.பாண்டியன், நடராஜன், தே.மு.தி.க. நகர செயலாளர் அழகர், தீ விபத்து தொடர்பான வழக்கில் பெற்றோர் சார்பில் நீதிமன்றத்தில் வாதாடி இழப்பீடு தொகையை வாங்கி கொடுத்த சென்னையை சேர்ந்த வக்கீல் தமிழரசன் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பலியான குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அதைத்தொடர்ந்து பலியான குழந்தைகளின் பெற்றோர், தீ விபத்தில் தப்பியவர்கள் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது. பேரணி பள்ளியில் இருந்து புறப்பட்டு கும்பகோணம் பாலக்கரையில் உள்ள குழந்தைகள் நினைவிடத்தில் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து நினைவிடத்தில் மலர் வளையம் வைக்கப்பட்டது. பின்னர் மாலையில் கும்பகோணம் மகாமக குளத்தில் மோட்ச தீபம் விடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு உயிர் நீத்த குழந்தைகளுக்காக மோட்ச தீபம் ஏற்றினர்.

மேலும் செய்திகள்