இந்தியாவிலேயே திராவிட கழகத்திற்கு ஈடாக வேறு எந்த இயக்கமும் கிடையாது

இந்தியாவிலேயே திராவிட கழகத்திற்கு ஈடாக வேறு எந்த இயக்கமும் கிடையாது என்று கி.வீரமணி தெரிவித்தார்.

Update: 2017-07-16 22:15 GMT

திருவாரூர்,

திருவாரூர் மண்டல திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் நேற்று திருவாரூரில் நடந்தது. கூட்டத்திற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். துணை தலைவர் கலிபூங்குன்றன், பொதுச்செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மண்டல தலைவர் கோபால், மண்டல செயலாளர் முனியாண்டி, மாநில விவசாய அணி செயலாளர் மோகன், மாநில மகளிர் பாசறை செயலாளர் செந்தமிழ்செல்வி, மாவட்ட துணை தலைவர் அருண்காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

இந்தியாவிலேயே திராவிட கழகத்திற்கு ஈடாக வேறு எந்த இயக்கமும் கிடையாது. தன்மானம், சுயமரியாதை, பகுத்தறிவை தருகின்ற ஒரே இயக்கம். அதனால் தான் இந்த கருப்பு சட்டைக்கு என்றும் ஒரு மரியாதை இருக்கின்றது. அதனை கட்டி காக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. நீட் தேர்வினால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இனி நமது பிள்ளைகள் டாக்டராக வர முடியாத நிலை உருவாகியுள்ளது.

ஒரே மொழி, ஒரே மதம், ஒரே மக்கள், ஒரே வரி என்ற நிலையில் ஜி.எஸ்.டி. வரி போடப்பட்டுள்ளது. அதே போல மாட்டு கறி சாப்பிட கூடாது என்ற நிலையில் மனித உரிமைகளும் பறிபோய் கொண்டிருக்கின்றன.

பெரியார் மறைந்து 45 ஆண்டுகள் ஆனாலும், அவருடைய கொள்கை வளர்ந்து கொண்டே சென்று கொண்டிருக்கின்றது. இன்னும் 10 நாட்களில் ஜெர்மனியில் பெரியார் சுயமரியாதை கொள்கை பரப்பு உலக மாநாடு நடைபெற உள்ளது. மின்சாரம், செல்போன் இல்லாமல் வாழ முடியாது. காலத்தின் தேவை கட்டாயம் அவசியமாகிறது. நமது பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுக்கு திராவிடர் கழக கொள்கையின் உணர்வுகளை ஊட்டி வளர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்திற்கு பின்னர் அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிப்பதற்கு எங்களுக்கு உறுப்பினர்கள் இல்லை. மாநில அரசு உரிமைகளை பாதுகாக்கின்ற வகையில் மத்திய அரசு நடக்கவில்லை. தமிழகத்தில் போலீஸ் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்படுகிறது. சட்ட–ஒழுங்கு கெட்டுவிட்டது. அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தை போராட்ட களமாக மத்திய, மாநில அரசுகள் மாற்றிவிட்டன. நடிகர்களின் அரசியல் பற்றி பேசி நேரத்தை வீணாக்க விரும்பமில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்