சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண்மை பட்டப்படிப்புக்கான தரவரிசை பட்டியல் துணை வேந்தர் வெளியிட்டார்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. வேளாண்மை பட்டப்படிப்புக்கான தரவரிசை பட்டியலை துணைவேந்தர் மணியன் வெளியிட்டார்.

Update: 2017-07-16 21:45 GMT

கடலூர்,

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. வேளாண்மை பட்டப்படிப்பு மற்றும் தோட்டக்கலை படிப்புகளுக்கான பதிவுகள் இணைணீதளம் மூலம் கடந்த மே 5–ந் தேதி முதல் 31–ந் தேதி வரை பதிவு செய்யப்பட்டது. இதில் பி.எஸ்சி. வேளாண்மை பட்டப்படிப்புக்கு 13 ஆயிரத்து 754 விண்ணப்பங்களும், அதே படிப்புக்கு சுயநிதி பிரிவில் 2 ஆயிரத்து 82 விண்ணப்பங்களும், தோட்டக்கலை படிப்புக்கு ஆயிரத்து 102 விண்ணப்பங்களும் பதிவு செய்யப்பட்டன. இவற்றில் பி.எஸ்சி. வேளாண்மை பட்டப்படிப்புக்கு 322 விண்ணப்பங்களும், அதே படிப்புக்கு சுயநிதி பிரிவில் 52 விண்ணப்பங்களும், தோட்டக்கலை படிப்புக்கு 14 விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டன.

மேற்கண்ட பட்டப்படிப்புகளுக்கான ரேண்டம் எண் கடந்த 7–ந் தேதி வழங்கப்பட்டது. தரவரிசைப்பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் மாணவர் சேர்க்கை ஆலோசகர் பேராசிரியர் ராம்குமார் வரவேற்றார். இதைத் தொடர்ந்து பி.எஸ்சி. வேளாண்மை பட்டப்படிப்புக்கான தரவரிசை பட்டியலை பல்கலைக்கழக துணை வேந்தர் மணியன் வெளியிட்டார். இதே பட்டப்படிப்பில் சுயநிதி பிரிவுக்கான தரவரிசை பட்டியலை ஆட்சிமன்ற குழு உறுப்பினரும், சிதம்பரம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பாண்டியன், பி.எஸ்சி. தோட்டக்கலை பட்டப்படிப்புக்கான தரவரிசை பட்டியலை ஆட்சிமன்ற குழு உறுப்பினர் உமாமகேஸ்வரன் ஆகியோர் வெளியிட்டனர். தர வரிசையை www.annamalaiuniversity.ac.in என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

மேலும் இளநிலை பொறியியல் படிப்புக்கான ரேண்டம் எண்ணை பல்கலைக்கழக பதிவாளர்(பொறுப்பு) பேராசிரியர் ஆறுமுகம், பி.எப்.எஸ்சி. மீள்வள படிப்புக்கான ரேண்டம் எண்ணை தேர்வு கட்டுப்பாடு அதிகாரி பேராசிரியர் சந்திரசேகரன், பி.ஓ.டி. தொழில்முறை சிகிச்சை படிப்புக்கான ரேண்டம் எண்ணை வேளாண்துறை முதல்வர் பேராசிரியர் ரவிச்சந்திரன், பி.பி.டி. இயன்முறை சிகிச்சை படிப்புக்கான ரேண்டம் எண்ணை கல்வியியல் துறை முதல்வர் பேராசிரியர் பாபு ஆகியோர் வெளியிட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பல்வேறு துறை முதல்வர்கள், தொலைதூர கல்வி இயக்குனர், பல்வேறு துறைகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாணவர் சேர்க்கை ஆலோசகர் பேராசிரியர் ராம்குமார் செய்து இருந்தார்.

மாணவர்கள் முற்றிலும் தகுதி அடிப்படையிலேயே சேர்க்கைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மாணவர்கள் பிளஸ்–2 அல்லது அதற்கு இணையான படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், தமிழக அரசின் இட ஒதுக்கீடு விதிப்படியும் சேர்க்கைக்கான பட்டியல் தயார் செய்யப்பட்டு கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடங்கள் தமிழக அரசின் விதிப்படி ஒதுக்கப்படும். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும். கலந்தாய்வு அட்டவணை மற்றும் கலந்தாய்வுக்கான அனுமதி கடிதத்தை தகுதியுள்ள மாணவர்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம். மாணவர்களுக்கு கலந்தாய்வு கடிதம் தனியாக அனுப்பப்படமாட்டாது.

மேலும் விவரங்களுக்கும், தகவல்களுக்கும் www.annamalaiuniversity.ac.in என்ற பல்கலைக்கழக இணையதள முகவரியை பார்க்கவும். auadmission2017@gmail.com என்ற இணையதள முகவரியிலோ அல்லது 04144–238348, 238349 ஆகிய டெலிபோன் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

மேற்கண்டவாறு சிதம்பரம் அண்ணாமலைபல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்