மருத்துவ துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது: அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு

மருத்துவ துறையில் இந்திய அளவில் முன்னோடி மற்றும் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

Update: 2017-07-16 22:15 GMT

சிவகங்கை,

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த தாய், சேய் சிகிச்சை பிரிவு கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். அமைச்சர் பாஸ்கரன், செந்தில்நாதன் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவக்கல்லூரி டீன் சாந்திமலர் வரவேற்று பேசினார். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவமனை புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:– இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் மருத்துவத்துறையில் தமிழகத்தை பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படியே மருத்துவ துறையில் இந்திய அளவில் முன்னோடி மற்றும் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தற்போது சிவகங்கையில் திறக்கப்பட்டுள்ள தாய், சேய் நலப்பிரிவில் குழந்தைப்பேறு மற்றும் மகளிர் நல டாக்டர்கள், குழந்தைகள் நலப்பிரிவு டாக்டர்கள், மயக்கவியல் டாக்டர்கள், பிரசவ மற்றும் சிசு பராமரிப்பில் சிறப்பு பயிற்சி பெற்ற செவிலியர்கள் போன்றோர் அடங்கிய மருத்துவ வல்லுனர் குழுவின் சேவை 24 மணி நேரமும் கிடைக்கும்.

மேலும் இங்கு செயற்கை சுவாச கருவிகள் உள்பட உயர்தர மருத்துவ உபகரணங்கள், கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய சிகிச்சைகள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பதால் சிக்கலான பிரசவங்கள் மற்றும் சிறு கவனிப்பிற்கான உடனடி உயரிய சிகிச்சை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் பிரசவத்தின் போது நிகழும் தாய் மற்றும் சேய் இறப்பு விகிதம் வெகுவாக குறையும்.

இந்த மருத்துவமனைக்கு பிரசவத்திற்கு வரும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும். மேலும் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 2 செயற்கை சுவாச கருவிகளும், ஒரு நவீன ஈ.சி.ஜி. எந்திரமும், பாயில்ஸ் மயக்கவியல் உபகரணங்கள் இரண்டும் என மொத்தம் ரூ.15 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோக துல்லிய தன்மை கொண்ட நவீன எக்ஸ்ரே எந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனையடுத்து பிரசவித்த பெண்களுக்கு தமிழக அரசின் சார்பில் 14 வகையான பொருட்கள் கொண்ட பரிசு பெட்டகத்தை அமைச்சர் பாஸ்கரன் வழங்கி பேசும்போது, சிவகங்கை அரசு மருத்துவமனையில் புதிதாக விபத்து மற்றும் அவசர கால சிகிச்சைப்பிரிவு கட்டிடம் கட்டுவதற்கு ரூ.4½ கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர காளையார்கோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன் மறவமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.

விழாவில் மானாமதுரை எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி, மருத்துவ கல்வித்துறை இயக்குனர் எட்வின் ஜோ, மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ, கோட்டாட்சியர் சுந்தரமூர்த்தி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் முருகானந்தம், முன்னாள் எம்.எல்.ஏ. சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்