சென்னை பல்கலைக்கழகத்தின் 159-வது பட்டமளிப்பு விழா 1,216 பேருக்கு கவர்னர் வித்யாசாகர்ராவ் பட்டம் வழங்கினார்

சென்னை பல்கலைக்கழகத்தின் 159-வது பட்டமளிப்பு விழாவில் 1,216 பேருக்கு கவர்னர் வித்யாசாகர்ராவ் பட்டம் வழங்கினார்.

Update: 2017-07-15 23:45 GMT
சென்னை,

சென்னை பல்கலைக்கழகத்தின் 159-வது பட்டமளிப்பு விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு தமிழக கவர்னரும்(பொறுப்பு), சென்னை பல்கலைக்கழக வேந்தருமான வித்யாசாகர்ராவ் தலைமை தாங்கினார்.

இதில் உயர்கல்வித்துறை அமைச்சரும், சென்னை பல்கலைக்கழகத்தின் இணை வேந்தருமான கே.பி.அன்பழகன், பிரதமரின் பொருளாதார அறிவுரைக்குழுவின் முன்னாள் தலைவரும், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னருமான சி.ரங்கராஜன், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ப.துரைசாமி ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் மொத்தம் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 780 பேர் பட்டம் பெற்றனர். இதில் 1,216 பேருக்கு கவர்னர் வித்யாசாகர்ராவ் பட்டம் வழங்கினார்.

சென்னை பல்கலைக்கழகத்தில் நவம்பர் 2015, ஏப்ரல் 2016, நவம்பர் 2016 ஆகிய தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற இளங்கலை மற்றும் முதுகலை (முழுநேரம், தொலைதூரக்கல்வி) பட்டதாரிகளும், ஜூலை 2017 வரை ஆய்வை நிறைவு செய்த முனைவர் பட்ட ஆய்வாளர்களும் இந்த பட்டமளிப்பு விழாவால் பயன்பெற்றனர். பட்டம் பெற்றவர்களில் பெண்கள் தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
விழாவில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரான சி.ரங்கராஜன் பேசியதாவது:-

இந்தியாவில் தனியார் முதலீடுகள் குறைந்து கொண்டே வருகின்றன. இதை அதிகப்படுத்த முதலீட்டுக்கான நடைமுறைகளை எளிமையாக்க வேண்டும். சரக்கு மற்றும் சேவைவரி (ஜி.எஸ்.டி.), அன்னிய நேரடி முதலீடு ஆகியவை அதற்கான வழிகள் ஆகும்.

வராக்கடன் அதிகமாக இருப்பதன் காரணமாக வங்கிகள் நஷ்டத்தில் இயங்குகின்றன. வராக்கடனில் ஒரு பகுதி பொருளாதார வளர்ச்சி குறைந்திருப்பதற்கு ஒரு காரணம் ஆகும். ஆனால் பணம் இருந்தும் கடனை திருப்பி தராதவர்களை தண்டிக்க வேண்டும்.

ஆண்டுக்கு 8 முதல் 9 சதவீத வளர்ச்சி விகிதம் இருந்தால் 2030-ம் ஆண்டில் இந்தியா குறைந்த வருமான நாடுகள் பட்டியலில் இருந்து, மத்திய தர வருமான நாடாக மாறக்கூடும். நமது சமூக பொருளாதார பிரச்சினைகளுக்கு இந்த வளர்ச்சி தான் தீர்வாக இருக்க முடியும். சட்டம், ஒழுங்கு போல் சமூக நல்லிணக்கமும் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியம்.
பல்கலைக்கழகங்கள் கல்வி கற்கும் இடமாக மட்டும் இல்லாமல், விவாதங்களுக்கும், கருத்து பரிமாற்றத்துக்குமான இடமாக இருக்க வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும் கருத்து சுதந்திரத்தை விட்டுக்கொடுக்கக்கூடாது. கேள்வி கேட்கும் உணர்வு கல்வி வளாகங்களில் தழைத்தோங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசும்போது, ‘கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 65 புதிய கல்லூரிகள் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து புதிய கல்லூரிகளை தொடங்கியதன் காரணமாக, உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதத்தில் தமிழ்நாடு உயர்வான நிலையை பெற்றுள்ளது. ‘ஸ்வயம்’, ‘ஸ்வயம் பிரபா’ திட்டத்தினை சென்னை பல்கலைக்கழகம் விரைவில் நடைமுறைப்படுத்தும். என்.ஐ.ஆர்.எப். வெளியிட்ட 2017-ம் ஆண்டுக்கான தரவரிசை பட்டியலில், தலைசிறந்த 100 கல்வி நிறுவனங்களில் தமிழ்நாட்டின் 37 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன’ என்றார்.

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ப.துரைசாமி பேசும்போது, ‘சென்னை பல்கலைக்கழகம் 2000-ம் ஆண்டு முதல் தேசிய தர நிர்ணயக்குழுவினால் தொடர்ச்சியாக 3 முறை உயர்நிலை மதிப்பீட்டினை பெற்று வந்துள்ளது. 2003-ம் ஆண்டு பல்கலைக்கழக மானியக்குழுவால் யு.பி.இ. என்ற திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 பல்கலைக்கழகங்களில் ஒன்றாக சென்னை பல்கலைக்கழகம் இருந்து வருகிறது. ஜூன்-2017-க்கு பிறகு சமர்ப்பிக்கப்படும் ஆய்வேடுகள் ‘உர்கண்டு’ என்ற மென்பொருள் மூலம் கருத்து திருட்டு இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகிறது’ என்றார்.

மேலும் செய்திகள்