டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கி ரூ.2 லட்சம் பறிப்பு

குடியாத்தத்தில் டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கி ரூ.2 லட்சத்தை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய 2 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2017-07-15 23:01 GMT

குடியாத்தம்,

குடியாத்தத்தை அடுத்த செருவங்கி ஊராட்சி கார்த்திகேயபுரத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 37). குடியாத்தத்தை அடுத்த செதுக்கரை அருகேயுள்ள பொன்னம்பட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். சீனிவாசன் டாஸ்மாக் கடையில் விற்பனையாகும் பணத்தை தினமும் வீட்டுக்கு கொண்டு சென்று எண்ணுவதும், அதனை மறுநாள் வங்கியில் செலுத்துவது வழக்கம் என்று கூறப்படுகிறது.

நேற்று இரவு சீனிவாசன், டாஸ்மாக் கடையை பூட்டிவிட்டு, மதுவிற்பனை செய்த பணத்தை மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு புறப்பட்டார். குடியாத்தம் டவுன் மேல்பட்டு சாலையில் வந்தபோது, ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் சீனிவாசனை பின்தொடர்ந்து வந்தனர். திடீரென அவர்கள் கையில் வைத்திருந்த உருட்டு கட்டையால் சீனிவாசன் பின்தலையில் தாக்கினர். இதில் நிலைகுலைந்த அவர் தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார்.

இதையடுத்து மர்ம நபர்கள் 2 பேரும் சீனிவாசனை கட்டையால் சரமாரியாக தாக்கினார்கள். அதைத் தொடர்ந்து கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து அதில் இருந்த பணத்தை எடுத்தனர். சீனிவாசன் திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். அந்த பகுதியில் ஆள்நடமாட்டம் குறைவாக இருந்ததால் உடனடியாக உதவிக்கு யாரும் வரவில்லை. மர்ம நபர்கள் 2 பேரும் பணத்தை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வேகமாக அங்கிருந்து சென்று மறைந்தனர்.

படுகாயம் அடைந்த சீனிவாசனை பொதுமக்கள் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ்பாபு மற்றும் குடியாத்தம் டவுன் இன்ஸ்பெக்டர் இருதயராஜ், சப்–இன்ஸ்பெக்டர்கள் நாகூரான், கிருஷ்ணமூர்த்தி, கிரிஜா ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு அக்கம், பக்கத்தில் மற்றும் குடியாத்தம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சீனிவாசனிடம் விசாரணை நடத்தினர். சீனிவாசனை தாக்கி ரூ.2 லட்சத்துக்கும் மேல் மர்மநபர்கள் பறித்து சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கி பணத்தை பறித்து சென்ற 2 மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


மேலும் செய்திகள்