பிறந்த நாளையொட்டி காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு

காமராஜர் பிறந்த நாளையொட்டி திருச்சியில் பல்வேறு இடங்களில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Update: 2017-07-15 22:45 GMT
மலைக்கோட்டை,

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளையொட்டி நேற்று திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள காமராஜர் உருவ சிலைக்கு திருச்சி மாவட்ட தி.மு.க. சார்பில் தெற்கு மாவட்ட செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் ஜவஹர், தெற்கு மாவட்ட தலைவர் வக்கீல் கோவிந்தராஜ் ஆகியோர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர். இதில் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருச்சியில் காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாச்சல மன்றத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு முன்னாள் மாவட்ட தலைவர் வக்கீல் சரவணன் தலைமையில் பாலாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் மாநில துணைத்தலைவர் சுப.சோமு, சிவாஜி சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி மாநகர் மாவட்ட த.மா.கா. சார்பில் மாவட்ட தலைவர் நந்தாசெந்தில்வேல் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டன. திருச்சி மாவட்ட சமத்துவ மக்கள் கட்சி சார்பில் காமராஜர் சிலைக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் முரளிதரன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இதில் மேற்கு மாவட்ட செயலாளர் குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஐக்கிய ஜனதா தளம் சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் அறிவழகன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. மாநில துணைத்தலைவர் ஆறுமுகம், பொதுச்செயலாளர் ஹேமநாதன், மாநில செய்தி தொடர்பாளர் வையாபுரி மற்றும் பலர் கலந்து கொண்டனர். திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு சமத்துவ மக்கள் கழகம் நாடார் பேரவை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் உத்திரபாண்டியன், முருகேசன், கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் பொதுநல அமைப்புகள் சார்பிலும், பள்ளிகளிலும் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

மேலும் செய்திகள்