பிரம்மாண்ட ‘மர்ம’ குழிகள்!
ரஷியாவில் பல பகுதிகளிலும், பூமியின் பல இடங்களில் உருவாகிய அல்லது உருவாக்கப்பட்ட பெரிய வட்ட வடிவிலான குழிகள்.
பூமியெங்கும் பல்வேறு விசித்திரங்கள் பரவிக் கிடக்கின்றன. அவற்றில் சிலவற்றுக்கு விடை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது, பல விடை காணப்படாமலே நீடிக்கின்றன.
பல மர்ம முடிச்சுகளுக்கு விடைகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னரும் அவற்றுக்கான பதில்கள் மக்களுக்கு வெளிப்படுத்தப்படுவதில்லை.
காரணம் அவ்வாறு வெளிப்படுத்தப்படும்போது மனித சமூகத்தின் அமைதி பாதிக்கப்படலாம், அதன் காரணமாகவே அவை மறைக்கப்படுவதாக ஒரு கருத்து நிலவுகிறது.
அப்படி விடை வெளிப்படுத்தப்படாத ஒரு விஷயம்தான் ரஷியாவில் பல பகுதிகளிலும், பூமியின் பல இடங்களில் உருவாகிய அல்லது உருவாக்கப்பட்ட பெரிய வட்ட வடிவிலான குழிகள் ஆகும்.
1980-ம் ஆண்டு முதன்முதலாக இதுபோன்ற குழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து 2014, 2015-ம் ஆண்டுகளிலும் கூட இவ்வாறான துளைகள் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
பூமிக்கு அடியில் ஏற்படும் வாயுக்களின் தாக்கம் காரணமாக இந்தப் பெரிய துளைகள் உருவானதாக சில ஆய்வாளர்கள் தெரிவித்தபோதும் அது முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
காரணம், இவை உருவாகியுள்ள இடங்கள். வெவ்வேறான பகுதிகளிலேயே இக்குழிகள் உருவாகி உள்ள காரணத்தினால் இந்தக் கருத்துக்கு மாற்றுக்கருத்து உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இந்தக் குழிகளை மேலோட்டமாகக் கவனிக்கும்போதே அவை செயற்கையாக உருவாக்கப்பட்டது என்பது தெளிவாகும் எனவும் குறிப்பிடப்படுகிறது.
ஆனால் இந்தப் பிரம்மாண்ட குழிகள் உருவாக்கப்பட்ட இடத்தில், அவற்றில் இருந்து அகழ்ந் தெடுக்கப்பட்ட மண் எங்கே போனது என்பது விஞ்ஞானிகளுக்கு வியப்பாக உள்ளது.
ரோமானோவ்ஸ்கி லீசைஸ் என்ற ஆய்வாளர், “இந்தத் துளைகளை கவனிக்கும்போது, இவை மேலிருந்து தோண்டப்பட்டதாகத் தோன்றவில்லை. நிலத்துக்கு உள்ளே இருந்து வெளியே தோண்டப்பட்டு வந்ததாகவே தெரிகிறது. எனவே பூமிக்குள் இருந்து ஏதாவது வெளியேறி இருக்கலாம்” என்கிறார்.
ஒரு சில ஆய்வாளர்கள், பூமியின் மண் மாதிரிகள் இங்கிருந்து எடுக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். மேலும் இந்தத் துளைகள் அடி ஆழம் வரை வட்ட வடிவில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தக் குழிகள் குறித்து தீவிர ஆய்வில் ஈடுபட்டிருக்கும் விஞ்ஞானிகள் இவை குறித்த விடையை அறிந்திருக்கலாம் என்ற கருத்தும் பரவலாக உலவுகிறது.
விஞ்ஞானிகள் வெளிப்படையாக வாய் திறக்கும் வரை, இந்த மர்மம் நீடித்தபடியே இருக்கும்!