மனஅழுத்தத்தை குறைக்க சிரித்து பேச வேண்டும்

ஆசிரியர்கள் மன அழுத்தத்தை குறைக்க சிரித்து பேசவேண்டும் என்று புத்தாக்க பயிற்சி முகாமில் நடிகர் தாமு பேசினார்.

Update: 2017-07-15 00:00 GMT

வேலூர்,

பள்ளிக்கல்வித்துறை சார்பில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஆற்றல் ஊட்டும் முகாம் என்ற தலைப்பில் புத்தாக்க பயிற்சி முகாம் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் தலைமை தாங்கி பேசினார். மாவட்ட கல்வி அலுவலர்கள் அமுதா, சாம்பசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் நடிகர் தாமு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:–

தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மன அழுத்தமின்றி பணிபுரியவேண்டும். அதற்கு அவர்கள் மாணவர்களுடன் இன்முகத்துடன் பழகவேண்டும். மன அழுத்தத்தை போக்க சிரித்து பேசவேண்டும். அடிக்கடி கைத்தட்டவேண்டும். ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கும்விதம் முக்கியமானது.

மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்து ஆர்வத்துடன் பாடத்தை கவனிக்கும் வகையில் கற்பிக்கவேண்டும். தலைமை ஆசிரியர்கள் தாங்கள் கடந்துவந்த பாதையை நினைத்து பார்க்கவேண்டும். அப்போதுதான் மற்ற ஆசிரியர்களின் நிலையை புரிந்து கொள்ள முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்