பெங்களூரு சிறை முறைகேடுகள் புகார் குறித்து விசாரிக்க விசாரணை அதிகாரி நியமனம்

பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் விசாரணை நடத்த சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

Update: 2017-07-14 23:24 GMT

பெங்களூரு,

கர்நாடக மாநில சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்து வருபவர் ரூபா.

இவர், பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா மத்திய சிறையில் கைதிகள் சட்டவிரோதமாக போதை பொருட்கள் பயன்படுத்துவதாகவும், சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவுக்கு தனி சமையல் அறை உள்பட பல்வேறு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், இதற்காக ரூ.2 கோடி லஞ்சம் வாங்கப்பட்டுள்ளதாகவும், இதுதவிர சிறைக்குள் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், போலீஸ் டி.ஜி.பி. சத்திய நாராயணராவிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

ஆனால் டி.ஐ.ஜி. ரூபாவின் குற்றச்சாட்டை டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் மறுத்து இருப்பதுடன், இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். தான் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருப்பதாக டி.ஐ.ஜி. ரூபா தெரிவித்துள் ளார். இந்த சம்பவம் ஐ.பி.எஸ். அதிகாரிகள் சத்திய நாராயணராவ், ரூபா இடையே மோதலாக உருவாகி உள்ளது.

மேலும் சிறைத்துறையில் முறைகேடுகள் நடப்பது, லஞ்சம் வாங்கி கொண்டு கைதிகளுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுப்பது, ஐ.பி.எஸ். அதிகாரி இடையிலான மோதல் பிரச்சினை கர்நாடக அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் நடக்கும் முறைகேடுகளை அரசு கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதாகவும், அதனால் தான் சிறைக்குள் கைதிகள் போதை பொருட்களை பயன்படுத்துவதாகவும், கைதிகள் சொகுசாக வாழ்வதாகவும் பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) ஆகிய எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.

இந்த முறைகேடு புகார்கள் குறித்து முதல்-மந்திரி சித்தராமையா உயர் மட்ட விசாரணை நடத்த நேற்று முன்தினம் உத்தரவிட்டு இருந்தார். அதன்படி பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய் குமார் தலைமையிலான குழுவை நியமித்து முதல்- மந்திரி சித்தராமையா நேற்று உத்தரவிட்டார். இதுபற்றி அவர் தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் நடந்ததாக கூறப்படும் முறைகேடு புகார் குறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய் குமார் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். இந்த முறைகேடு தொடர்பான விசாரணையின் முதற்கட்ட அறிக்கையை ஒரு வாரத்திற்குள் அரசுக்கு அளிக்கும்படி தெரிவித்துள்ளேன். விசாரணையின் முழுமையான அறிக்கையை ஒரு மாதத்திற்குள் அளிக்கும்படியும் உத்தரவு பிறப்பித்து உள்ளேன்.

இவ்வாறு முதல்-மந்திரி சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்