தாம்பரம் 3–வது ரெயில் முனையம் விரைவில் செயல்படும் கோட்ட மேலாளர் தகவல்
ரெயில்வே ஆணைய அனுமதி கிடைத்ததும் தாம்பரத்தில் 3–வது ரெயில் முனையம் விரைவில் செயல்பட தொடங்கும் என ரெயில்வே கோட்ட மேலாளர் நவீன் குலாட்டி கூறினார்.;
தாம்பரம்,
சென்னையை அடுத்த தாம்பரம், பல்லாவரம் தொகுதிகளில் நடைபெறும் ரெயில்வே பணிகளை ஸ்ரீபெரும்புதூர் எம்.பி., கே.என்.ராமச்சந்திரன், தென்னக ரெயில்வே சென்னை கோட்ட மேலாளர் நவீன் குலாட்டி மற்றும் ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது கோட்ட மேலாளர் நவீன் குலாட்டி கூறியதாவது:–
தாம்பரம் 3–வது ரெயில்வே முனைய பணிகள் முடியும் நிலையில் உள்ளது. ரெயில்வே ஆணையத்திடம் சில அனுமதிகள் பெற வேண்டி உள்ளது. சில ரெயில்கள் சோதனை அடிப்படையில் மாற்றம் செய்யப்பட்டு அவை முறையாக செயல்படுகிறதா? என சோதித்த பிறகு புதிய ரெயில்கள் அறிமுகம் செய்யப்படும்.
ரெயில்வே ஆணையம் அனுமதி கிடைத்ததும் தாம்பரம் 3–வது முனையம் செயல்பட தொடங்கும். இதற்கான தேதியை இப்போதே தெரிவிக்க இயலாது. வெகு விரைவில் செயல்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கே.என்.ராமச்சந்திரன் எம்.பி. கூறுகையில், ‘தாம்பரம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கிழக்கு, மேற்கு தாம்பரம் பகுதி மக்கள் பயன்பாட்டுக்கு ரூ.3 கோடியே 39 லட்சம் செலவில் 1–12–2016–ல் சுரங்க நடைபாதை அமைக்கும் பணிகள் தொடங்கியது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்றார்.
ஆய்வின் போது முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், ரெயில்வே அதிகாரிகள் உடன் சென்றனர்.