தமிழகத்திற்கு காவிரியில் 5 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே திறந்து விடப்பட்டது

கர்நாடகத்தில் இந்த ஆண்டு போதிய அளவு மழை பெய்யவில்லை என்றும், அதனால் காவிரியில் தமிழகத்திற்கு 5 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளது என்றும் முதல்–மந்திரி சித்தராமையா கூறினார்.

Update: 2017-07-14 23:06 GMT

மைசூரு,

கன்னட ஆடி மாதத்தையொட்டி மைசூரு சாமுண்டீஸ்வரி கோவிலில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொள்ளவும், பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் முதல்–மந்திரி சித்தராமையா 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் மைசூருவுக்கு சென்றார். மைசூரு மண்டஹள்ளி விமான நிலையத்தில் வந்து இறங்கிய அவரிடம் நிருபர்கள் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டு இருப்பதை பற்றி கேள்வி எழுப்பினர். இதற்கு சித்தராமையா பதில் அளிக்கையில் கூறியதாவது:–

மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவில் உள்ள கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. தண்ணீர் திறந்து விடவில்லை என்றால் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யும். அது விசாரணைக்கு வந்தால் கண்டிப்பாக நாம்(கர்நாடக அரசு) கோர்ட்டில் பதில் கூற வேண்டும். இதை தவிர்க்கவே காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை மாதங்களில் கர்நாடகத்தில் அதிக அளவில் மழை பெய்யும். அப்போது தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தேவையான அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு போதுமான மழை பெய்யவில்லை. இதனால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடமுடியாத நிலை ஏற்பட்டது.

இந்த ஆண்டு ஓரளவு பருவமழை பெய்து இருப்பதால் அணைகளில் நீர்மட்டம் சற்று உயர்ந்து உள்ளது. இதனால் காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. வழக்கமாக தமிழகத்திற்கு ஜூன் மாதத்தில் 10 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீரும், ஜூலை மாதத்தில் 50 டி.எம்.சி. தண்ணீரும் என மொத்தம் இந்த 2 மாதங்களில் 60 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றம் கூறியுள்ளது. ஆனால் இந்த ஆண்டு போதிய மழை பெய்யாததால், காவிரியில் தமிழகத்திற்கு 5 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே திறந்து விடப்பட்டு உள்ளது.

கர்நாடகத்தில் இந்த ஆண்டு போதிய அளவிற்கு பருவமழை பெய்யவில்லை என்றால், செயற்கை மழையை பெய்விக்க அரசு முடிவு எடுத்து உள்ளது. இதற்காக டெண்டரும் விடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்