வளசரவாக்கத்தில் துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பெருநகர சென்னை மாநகராட்சி 11–வது மண்டல அலுவலகம் வளசரவாக்கத்தில் உள்ளது.

Update: 2017-07-14 23:02 GMT

பூந்தமல்லி,

 இந்த மண்டலத்தில் உள்ள 143 முதல் 155 வரையிலான 13 வார்டு பகுதிகளில் சேரும் குப்பைகளை அகற்றும் பணியில் 100–க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் அதிகாரிகள் தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்று கூறி மாநகராட்சி செங்கொடி சங்கம் சார்பில் பெண்கள் உள்பட ஏராளமான துப்புரவு பணியாளர்கள் வளசரவாக்கம் மண்டல அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசு அதிகாரிகளை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

இதுபற்றி அவர்கள் கூறும்போது, ‘‘துப்புரவு பணியாளர்களுக்கு குப்பைகளை அகற்றுவதற்கு தேவையான துடைப்பம், கை, கால் உறைகள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்குவது இல்லை. சம்பளம் வழங்கவும் கால தாமதம் ஏற்படுகிறது. குப்பை அள்ள பயன்படுத்தப்படும் மூன்று சக்கர வாகனங்கள் பழுதடைந்தால் அதனை உடனே சரி செய்து கொடுக்க அதிகாரிகள் முன்வருவது இல்லை. துப்புரவு பணியாளர்கள் பணி முடிந்து ஓய்வெடுக்க அறை அமைத்து தர வேண்டும்’’ என்றனர்.

அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள், இன்னும் ஒரு வாரத்தில் உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றனர். அப்படி இல்லாவிட்டால் நாங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறிய துப்புரவு பணியாளர்கள், ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்