இரணியல் கோணத்தில் டாஸ்மாக் கடை நிரந்தரமாக மூடக்கோரி 3–வது நாளா பெண்கள் குழந்தைகளுடன் போராட்டம்
இரணியல்கோணத்தில் உள்ள டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக்கோரி 3–வது நாளாக குழந்தைகளுடன் பெண்கள் போராட்டம் நடத்தினர்.
அழகியமண்டபம்,
இரணியல் கோணத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கடையை திறக்க முடியாதபடி காலை 10 மணியில் இருந்து இரவு 10 மணி வரை முற்றுகையில் ஈடுபட்டு வருகின்றனர். டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்ததால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் 3–வது நாளாக நேற்று காலை 10 மணியளவில் இரணியல் கோணம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 200 பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் திரண்டு வந்து மீண்டும் டாஸ்மாக் கடை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த குளச்சல் துணை போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி விரைந்து சென்று போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.அப்போது அவர் கூறுகையில், இந்த டாஸ்மாக் கடை அரசு நிபந்தனைகளுக்கு உட்பட்டு தான் திறக்கப்பட்டு உள்ளது. அதனால் இந்த கடை முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினால் சட்டம் ஒழுங்கை மீறிய செயலாகும். மேலும், பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை அழைத்து வந்து போராட்டத்தில் ஈடுபடுத்தி இருப்பது பெரிய தவறு என்றும், தற்காலிகமாக வருகிற 19–ந் தேதி வரை இந்த டாஸ்மாக் கடை திறக்கமாட்டார்கள். அதற்குள் நீங்கள் மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, டாஸ்மாக் அதிகாரிகள் ஆகியோரிடம் சென்று உங்களது கோரிக்கையை தெரியப்படுத்துங்கள். அதைவிடுத்து இங்கு போராட்டம் நடந்த உங்களுக்கு எந்த அனுமதியும் கிடையாது. மீறி நடந்தால் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுரை கூறினார்.
இதைத்தொடர்ந்து போராட்டகாரர்கள் தங்ளது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டனர். பின்னர், அவர்கள் கடையில் இருந்து 25 மீட்டர் தள்ளி இரணியல் ரயில்வே கிராசிங் அருகே உள்ள ஒரு கோவிலுக்கு சென்று தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். போட்டகுழு ஒருங்கிணைப்பாளரும் இரணியல் பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் ராஜேந்திரன், சவுரிபிள்ளை உள்பட 10 பேர் கொண்டு குழு மாவட்ட கலெக்டரை சந்திக்க அலுவலகத்திற்கு கோரிக்கை மனுவுடன் சென்றனர். தொடர்ந்து இரவு 10 மணி வரை போராட்டம் நடைபெற்றது.