டெம்போ டிரைவரான காதலனுடன் மருத்துவ கல்லூரி மாணவி தஞ்சம்

டெம்போ டிரைவரை மருத்துவ கல்லூரி மாணவி காதலித்தார். இந்த காதல்ஜோடி பாதுகாப்பு கேட்டு நல்லூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

Update: 2017-07-14 22:36 GMT
கந்தம்பாளையம்,

நாமக்கல் மாவட்டம் பரமத்தி தாலுகா கந்தம்பாளையம் அருகே உள்ள திடுமல் ஆவாரங்காட்டைச் சேர்ந்தவர் கந்தசாமி மகள் விஷ்ணுபிரியா (வயது 19). இவர் சென்னையில் அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

அதே ஊரைச் சேர்ந்தவர் அய்யாவு. இவருடைய மகன் கோபால் (வயது 21). இவர் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு டெம்போ டிரைவராக வேலைபார்த்து வருகிறார்.

கோபாலும், விஷ்ணுபிரியாவும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதால் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த காதல் பற்றிய விவரம் விஷ்ணுபிரியாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. இந்த காதலுக்கு அவருடைய பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் விஷ்ணுபிரியாவுக்கு பெற்றோர்கள் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர். இதை அறிந்த விஷ்ணுபிரியாவும், கோபாலும் கடந்த 12-ந்தேதி வீட்டை விட்டுவெளியேறினர். பின்னர் நண்பர் ஒருவர் வீட்டுக்கு சென்று தங்கினர்.பின்னர் நேற்று முன்தினம் நல்லூர் காளியம்மன் கோவிலில் இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு நல்லூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதுகுறித்து நல்லூர் போலீசார், இருவரின் பெற்றோர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது விஷ்ணுபிரியா தனது காதலனுடன் செல்வதாக கூறினார். இதனால் காதலனுடன் விஷ்ணுபிரியாவை போலீசார் அனுப்பி வைத்தனர்.
பெற்றோரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்