பரமத்திவேலூர் காவிரி பாலத்தின் வழியே செல்லும் குடிநீர் குழாயில் கசிவு

பரமத்திவேலூர் பழைய காவிரி பாலத்தின் வழியே செல்லும் குடிநீர் குழாயில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு உள்ளது. இதை உடனே சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Update: 2017-07-14 22:33 GMT

பரமத்திவேலூர்,

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை கடந்து தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. கரூர் – நாமக்கல் மாவட்டங்களைச் இணைக்கும் வகையில் அமைந்துள்ள பை–பாஸ் சாலையில் காவிரி ஆற்றின் குறுக்கே இரண்டு பாலங்கள் கட்டப்பட்டு உள்ளது.

இதில் பழைய காவிரி பாலத்தின் வழியாக கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையத்தில் உள்ள காவிரிஆற்றில் ஆழ்குழாய் கிணறு அமைத்து அங்கிருந்து இந்த பாலத்தின் வழியாக குழாய்கள் அமைத்து பரமத்திவேலூருக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.

இந்த குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் மேல் ஆகி விட்டன. இந்தநிலையில் இரும்பு குழாய்கள் துருப்பிடித்து தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளது.

இதில் இருந்து தண்ணீர் வெளியேறி கொண்டு இருக்கிறது. இந்த தண்ணீர் பாலத்தின் வழியாக செல்வோர் மீதும், இருசக்கர வாகனங்களில் செல்வோர் மீது பீய்ச்சி அடிக்கிறது. அந்த தண்ணீர் பாலத்தின் ஓரத்தில் தேங்கி நிற்கிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது.

மேலும் பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களும் பாலத்தின் வழியாக செல்கின்றன. பாலத்தின் ஓரத்தில் தண்ணீர் தேங்கி இருப்பதால் வாகனங்களும் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

எனவே பெரிய அளவிலான விபத்து ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள கசிவை சரிசெய்ய வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


மேலும் செய்திகள்