மத்திய, மாநில அரசுகளை கண்டித்து த.மா.கா. சார்பில் போராட்டம் ஜி.கே.வாசன் பேட்டி

ஜி.எஸ்.டி.யில் திருத்தம் கொண்டு வராவிட்டால் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து த.மா.கா. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று ஜி.கே.வாசன் கூறினார்.

Update: 2017-07-14 22:22 GMT

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் கிருஷ்ணகிரி நகராட்சி தலைவருமான சத்தியமூர்த்தி உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அஞ்சலி செலுத்தினார். முன்னதாக கிருஷ்ணகிரி தமிழ்நாடு ஓட்டலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:– தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை தொடர்ந்து வருகிறது. ஏரி, குளங்கள் முறையாக தூர்வாரப்படவில்லை. தற்போது அவற்றை தூர்வார அரசு திட்டத்தை தொடங்கி இருக்கிறது. இந்த திட்டத்தில் இடைத்தரகர்கள் இல்லாமல் குடிநீர் பிரச்சினைகள் ஏற்படாத வகையில் திட்டத்தை நிறைவேற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் ஏரியில் இருந்து பெனுகொண்டாபுரம், மலையாண்டஅள்ளியில் கால்வாயை சரி செய்து ஏரி வழியாக பாம்பாறு அணைக்கு நீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். கே.ஆர்.பி. அணை மூலம் இடதுபுற கால்வாய் வழியாக கிருஷ்ணகிரி பெரிய ஏரிக்கு நீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக ஜோலார்பேட்டை வரையில் ரெயில்வே பாதை அமைக்க வேண்டும்.

சட்டத்தின் முன்பு குற்றவாளியாக இருக்க கூடிய ஒரு நபருக்கு விதிமுறைகளை மீறி சிறையில் சலுகைகள் அளித்திருப்பதாக வந்துள்ள செய்திகள் குறித்து உடனடியாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். அந்த விசாரணையை ஒரு குறிப்பிட்ட கால கெடுவுக்குள் விசாரித்து முடித்து உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று குழு அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. இதற்கு கர்நாடகா ஒத்துழைக்க மறுக்கிறது. இந்த வி‌ஷயத்தில் மத்திய பா.ஜனதா அரசு நடுநிலையுடன் செயல்பட வேண்டும்.

ஐ.எஸ். ஆதரவு தீவிரவாதிகள் பிடிபட்டது, கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அலுவலகம் மீது குண்டு வீச்சு, சென்னையில் தேனாம்பேட்டை போலீஸ் நிலையம் மீது குண்டு வீச்சு போன்ற செய்திகள் தமிழகத்தின் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதை போல உள்ளது. எனவே தமிழக ஆட்சியாளர்கள் சட்டம் – ஒழுங்கை பேணி காத்து இது போன்ற பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

கதிராமங்கலம் கிராமத்தில் மக்களின் பிரச்சினைகளுக்காக போராடி கைதான 10 பேரையும் விடுதலை செய்ய வேண்டும். உள்ளாட்சி தேர்தலை சந்திக்க த.மா.கா. தயாராக உள்ளது. தற்போது ஆட்சியாளர்கள் மக்கள் தங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள். தேர்தலில் கூட்டணி ஏற்படுத்தி போட்டியிடுவோம். ஜி.எஸ்.டி. மசோதா அவசர கோலமாக மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதில் பட்டாசு தொழிற்சாலை தொழிலாளர்கள், தீப்பெட்டி தொழிலாளர்கள், வணிகர்கள், திரைத்துறையினர் என லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த மாதம் மீண்டும் ஜி.எஸ்.டி. குழு கூடுகிறது. இதில் மக்களின் பிரச்சினைகளை அறிந்து, அதற்கேற்ப ஜி.எஸ்.டி.யில் திருத்தம் கொண்டு வர வேண்டும். இல்லாவிட்டால் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து த.மா.கா. சார்பில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயப்பிரகாஷ், மாநில செயலாளர்கள் காசிலிங்கம், தசரதன் என்கிற மனோகரன், கே.ஜி.பிரகாஷ், மாவட்ட பொருளாளர் அரங்கநாதன், நகர தலைவர் சத்யநாராயணன், நிர்வாகிகள் குலோத்துங்கள், பெரியசாமி உள்பட பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்