பாலக்கோடு பகுதியில் தக்காளி விலை கிடு, கிடு உயர்வு கிலோ ரூ.70–க்கு

பாலக்கோடு பகுதியில் தக்காளி விலை ‘கிடுகிடு‘வென உயர்ந்து கிலோ ரூ.70–க்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2017-07-14 22:09 GMT

பாலக்கோடு,

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. இதனால் பாலக்கோட்டில் உள்ள தக்காளி மார்க்கெட் முக்கிய விற்பனை கூடமாக திகழ்கிறது. இந்த பகுதிகளில் நாள் ஒன்றுக்கு சுமார் 10 டன் வரை சராசரியாக தக்காளி அறுவடை செய்யப்படுகிறது. இவற்றை விவசாயிகள் தக்காளி மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்வார்கள்.

இந்தநிலையில் பருவமழை பொய்த்து கடும் வறட்சி நிலவுவதால் பாலக்கோடு மார்க்கெட்டுக்கு தக்காளியின் வரத்து குறைந்துள்ளது. நாள் ஒன்றுக்கு 3 முதல் 4 டன் அளவிற்கு மட்டுமே தக்காளி வருவதால் விலை கிடு,கிடுவென உயர்ந்துள்ளது. 25 கிலோ எடை கொண்ட ஒரு கிரேடு ரூ.1600–க்கும், 15 கிலோ எடை உள்ள கூடை ரூ.900–க்கும் விற்பனையாகிறது.

வெளி மார்க்கெட் மற்றும் சந்தைகளில் சில்லறையாக ஒரு கிலோ தக்காளி ரூ.70–க்கு விற்பனையாகிறது. பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டில் இருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள சேலம், ஈரோடு, கோவை, ஈரோடு, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குறிப்பாக பாலக்கோட்டில் உள்ள தக்காளி மார்க்கெட்டில் இருந்து தக்காளிகள் வெளிமாநிலங்களுக்கும், வெளிமாவட்டங்களுக்கும் பெட்டிகளில் நிரப்பி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பாலக்கோடு பகுதியில் பருவமழை பொய்த்து போனதால் தக்காளி சாகுபடி குறைந்துள்ளது. இதனால் மார்க்கெட் மற்றும் சந்தைகளுக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்று தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்