வீட்டில் பதுக்கிய 100 கிலோ கஞ்சா பறிமுதல்
சேலம் அன்னதானப்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக வந்த புகாரையடுத்து தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
சேலம்,
இதில் நேற்று மாலை ஒருவரை மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் சுரேஷ் (வயது 36) என்பதும், கஞ்சா விற்பவர் என்பதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து 20 கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அன்னதானப்பட்டியில் வசிக்கும் வசந்தா (37), தமிழரசி (42), சத்யா (39) ஆகியோரிடம் இருந்து கஞ்சா வாங்கியதாக போலீசாரிடம் அவர் தெரிவித்தார். அந்த பெண்களின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது, அங்கு பதுக்கி வைத்திருந்த 100 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள அந்த 3 பெண்களையும் போலீசார் தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பல லட்ச ரூபாய் மதிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.