ஜல்லிக்கட்டுக்கு போராடியது போல் வேலைவாய்ப்பு பெறவும் இளைஞர்கள் போராட வேண்டும்
ஜல்லிக்கட்டுக்கு போராடியது போல் வேலைவாய்ப்பு பெறவும் இளைஞர்கள் போராட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
அரியலூர்,
நாட்டின் சீரழிவுக்கு காரணமான மதுக்கடைகளை சட்டப்போராட்டத்தின் மூலம் மூடவைத்த பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு பாராட்டு விழா மற்றும் பொதுக்கூட்டம் அரியலூர் அண்ணா சிலை அருகே நடந்தது. கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:–
அரியலூர் மாவட்டம் அமைய போராடியது பா.ம.க தான். அதற்காக எனது தலைமையில் பல போராட்டங்கள் நடந்தன. தமிழகத்தில் 81 லட்சம் பேர் வேலையில்லாமல் இருக்கின்றனர். ஜல்லிக்கட்டுக்கு போராடியது போல் வேலைவாய்ப்புக்கும் இளைஞர்கள்போராட வேண்டும். ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்திற்கு 8,300 ஏக்கர் நிலம் 28 கிராமங்களில் இருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. ஏக்கருக்கு 15 லட்சம் தர வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனினும் இந்த திட்டமும் தொடங்குவதாக தெரியவில்லை. நிலம் கொடுத்தவர்களுக்கு நிவாரணமும் வழங்கவில்லை. கையகப்படுத்திய நிலத்தையும் திரும்ப தர மறுக்கின்றனர். இந்த பிரச்சினையில் தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விபத்துக்களை தடுக்க...
கூட்டத்தில் பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணிராமதாஸ் எம்.பி பேசியதாவது:–
தமிழக முதல்–அமைச்சராக வர வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு இல்லை. தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகளிடம் இருந்து தமிழக மக்களை காப்பாற்ற வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 5 ஆண்டுகளில் 50 ஆண்டுகளுக்கான முன்னேற்ற திட்டங்களை கொண்டு வருவோம். அரியலூர் மாவட்டத்தில் சிமெண்டு ஆலைகளால் காற்று மாசுபடுகிறது.
மேலும் சிமெண்டு ஆலைகளுக்கான அதிகபட்ச லாரி போக்குவரத்தினால் விபத்துகளும் அதிகம் நடக்கின்றன. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொன்னேரிக்கு கொள்ளிடம் நீரை கொண்டு வர வேண்டும். கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும். அரசு கட்ட தவறினால் ஆகஸ்டு 5–ந்தேதி பா.ம.க சார்பில் அணை கட்ட போராட்டம் நடத்தப்படும். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஓ.என்.ஜி.சி கிணறுகளை மூடி காவிரி பகுதியை வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.
தனியார் டி.வி. நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவுக்கு 1½ கோடி மக்கள் ஓட்டு போட்டு காப்பாற்றியதாக கூறுகின்றனர். அந்த ஓட்டை எனக்கு போட்டிருந்தால் நான் தமிழகத்தையும், மக்களின் தலை எழுத்தையும் மாற்றியிருப்பேன். தமிழ்நாட்டில் சிஸ்டம் சரியில்லை என கூறும் ரஜினிகாந்த் கலைஞரை பாராட்டியபோது சொல்லியிருக்கலாம். ஜெயலலிதா உயிருடன் இருந்த போது சொல்லியிருக்கலாம். ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் சசிகலாவுடன் ஊழல் வழக்கில் சிறை சென்று இருப்பார்.
தமிழக முதல்–அமைச்சர் பழனிசாமி நடந்து சென்றால் யாரும் ஒன்றும் செய்யப்போவதில்லை. எதற்காக இவ்வளவு போலீஸ் பாதுகாப்பு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. சின்னத்தை பார்த்து ஓட்டுபோட்ட மக்கள் இனி திட்டத்தை பார்த்து ஓட்டுபோட வேண்டும். ரூ.200, 300–க்கு ஓட்டை விற்றுவிட்டீர்கள். ஆனால் இனிமேல் அதுபோல் நிலைஏற்படாது என நினைக்கிறேன். எனவே தமிழ்நாட்டை நாசப்படுத்தியவர்களை தூக்கி போடுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.