தமிழக விவசாயிகள் டெல்லி பயணம் மீண்டும் போராட்டத்தை தொடங்கப்போவதாக அறிவிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி டெல்லியில் மீண்டும் போராட்டம் நடத்துவதற்காக 100 விவசாயிகளுடன் அய்யாக்கண்ணு புறப்பட்டு சென்றார்.

Update: 2017-07-14 22:30 GMT

திருச்சி,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் கடந்த மார்ச் மாதம் தொடர் போராட்டம் நடத்தினார்கள்.பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து தங்களது கோரிக்கைகளை விளக்க அனுமதிக்கவேண்டும் எனவும் அவர்கள் கூறினார்கள். ஆனால் பிரதமர் நரேந்திரமோடியை சந்திக்க அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. 41 நாட்களாக அவர்களது போராட்டம் நீடித்து வந்த நிலையில் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தார். அவர் அளித்த உறுதியை ஏற்று தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெற்று விவசாயிகள் தமிழகத்திற்கு திரும்பினார்கள்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லியில் 29 மாநில விவசாய சங்க தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் மீண்டும் அனைத்து மாநில விவசாயிகளின் ஆதரவுடன் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவின் அடிப்படையில் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் மீண்டும் போராட்டம் நடத்துவதற்காக சுமார் 100 விவசாயிகள் நேற்று சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். சென்னையில் இருந்து ரெயில் மூலம் டெல்லிக்கு செல்கிறார்கள்.

ரெயிலில் ஏறுவதற்கு முன்பாக அய்யாக்கண்ணு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் பயிர் கடன் தள்ளுபடி செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 16–ந்தேதி முதல் டெல்லியில் மீண்டும் போராட்டம் நடத்த இருக்கிறோம். எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை எங்கள் போராட்டம் தொடரும். கோரிக்கை நிறைவேறாமல் தமிழகத்திற்கு திரும்பமாட்டோம். எங்களுடன் வட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகளும் பங்கேற்பார்கள்’ என்றார்.முன்னதாக ரெயில் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் நடந்த பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றபோது இறந்த மற்றும் தற்கொலை செய்து கொண்ட 4 விவசாயிகளின் குடும்பத்துக்கு தலா ரூ.25 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது. திரைப்பட தயாரிப்பாளர் ஆதம்பாவா, நடிகர் துரை சுதாகர் ஆகியோர் இந்த நிதியை வழங்கினார்கள்.

மேலும் செய்திகள்