சாலை மறியல் செய்ய முயன்ற வழக்கில் கடலூர் கோர்ட்டில் பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பினர் 57 பேர் ஆஜர்

சாலை மறியல் செய்ய முயன்ற வழக்கில் கடலூர் கோர்ட்டில் பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பினர் 57 பேர் ஆஜர் அமைச்சர் தூண்டுதலின் பேரில் பொய்வழக்கு பதிவு செய்ததாக நீதிபதியிடம் மனு

Update: 2017-07-14 22:30 GMT

கடலூர்,

சாலை மறியல் செய்ய முயன்ற வழக்கில் கடலூர் கோர்ட்டில் பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பினர் 57 பேர் ஆஜரானார்கள். அவர்கள் அமைச்சர் எம்.சி.சம்பத் தூண்டுதலின்பேரில் போலீசார் பொய் வழக்கு பதிவு செய்ததாக மாவட்ட நீதிபதியிடம் மனு அளித்தனர்.

கடலூர் ஜவான்பவன்– கம்மியம்பேட்டை சாலையை சீரமைக்கக்கோரி பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பினர் பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை கண்டித்து கடந்த 25–5–2017 அன்று பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பினர் சாலை மறியல் செய்ய முயன்றனர். இதில் மாற்றுத்திறனாளிகள், முதியோரும் பங்கேற்றனர்.

அவர்களை திருப்பாதிரிப்புலியூர் போலீசார் கைது செய்து, அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அங்கு அவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அதன்பிறகு நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு அனைவரும் அங்கிருந்து சென்றனர்.

இதற்கிடையில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலை மறியல் செய்ய முயன்றதாக பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பினர் 60 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு கடலூர் 3–வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது. நேற்று இவ்வழக்கு நீதிபதி ராஜேஷ்கண்ணா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இவ்வழக்கில் தொடர்புடைய 57 பேர் ஆஜரானார்கள். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, இவ்வழக்கு விசாரணையை வருகிற 10–10–2017–க்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார். இவ்வழக்கில் 2 பேர் ஆஜராகவில்லை. ஒருவர் இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பினர் மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான தனபாலை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

ரூ.2½ கோடி செலவில் ஜவான்பவன்–கம்மியம்பேட்டை சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சாலை அமைக்கும் பணிக்கு முறைப்படி ஒப்பந்தம் ஏற்படுத்தாத காரணத்தால் பெரும் தொகைக்கு ஊழல் நடந்திருப்பதும், இதனால் தான் குண்டும், குழியுமான இந்த சாலை சீரமைப்புக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதும் தெரிய வந்தது.

இதை கண்டித்து போராட்டம் நடத்த சென்ற பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பினர் மீது அமைச்சர் எம்.சி.சம்பத் தூண்டுதலின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்த பொய் வழக்கை பதிவு செய்துள்ளார். ஆகவே இந்த பொய் வழக்கை ரத்து செய்யவும், ஊழல் செய்த அதிகாரிகள், ஒப்பந்ததாரர், பொய் வழக்கு பதிவு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் மீது மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்