அனைத்து அரசு தலைமை மருத்துவமனைகளிலும் பன்றிக்காய்ச்சலுக்கு தனிவார்டு அமைக்க வேண்டும்
அனைத்து அரசு தலைமை மருத்துவமனைகளிலும் பன்றிக்காய்ச்சலுக்கு தனிவார்டு அமைக்க வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மதுரை,
மதுரை கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்த ஆனந்தராஜ், மதுரை ஐகோர்ட்டில் தொடர்ந்துள்ள பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:–
தமிழகத்தில் கடந்த 2 மாதங்களில் 1200–க்கும் மேற்பட்டோர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 15–க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் ஒருசில மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் மட்டுமே, பன்றிக்காய்ச்சலை கண்டறியும் பரிசோதனை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் மதுரை, நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளையே அணுக வேண்டிய நிலை உள்ளது.
இதனால், பரிசோதனை முடிவுகள் உடனுக்குடன் கிடைக்கப்பெறாமலும், நோயின் தன்மை அதிகரிக்கும் சூழலும் இருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.
மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் மருந்துகள் இருப்பினும், பாதிக்கப்பட்டவர்களுக்கான தனி வார்டுகள் ஏற்படுத்தப்படவில்லை. எனவே அனைத்து அரசு தலைமை மருத்துவமனைகளிலும் பன்றிக்காய்ச்சல் நோய் பாதிப்புகளை கண்டறியும் பரிசோதனை வசதிகளைக் கொண்ட பி.எஸ்.எல்.4 ஆய்வகத்தை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்.
மேலும் அனைத்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும் பன்றிக்காய்ச்சல் நோயைக் கண்டறியும் வசதியை உடனடியாக ஏற்படுத்தவும், உலக சுகாதார அமைப்பின் கோட்பாடுகளுக்கு உட்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பாதுகாக்கப்பட்ட தனி வார்டுகளை அமைக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும் பன்றிக் காய்ச்சலுக்கான தனி வார்டுகளை 4 மாதத்திற்குள் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.