திண்டுக்கல், சாணார்பட்டி பகுதிகளில் குடிநீர் கேட்டு சாலை மறியல்– முற்றுகை

திண்டுக்கல், சாணார்பட்டி பகுதிகளில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்–முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-07-14 22:15 GMT

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் ஒரு மாதத்துக்கும் அதிகமான இடைவெளியில்தான் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இது பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்வதில்லை. இதனால் தினமும் நகர் பகுதியில் ஏதாவது ஒரு பகுதியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை பார்க்க முடிகிறது.

இந்த நிலையில், திண்டுக்கல் 34–வது வார்டு சாமியார் தோட்டம், குருநகர், ராஜலட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 3 மாதங்களாக சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர். நேற்று ஆத்திரம் அடைந்த அந்த பகுதியினர் திடீரென திண்டுக்கல்– நத்தம் சாலை மேம்பாலம் முடியும் இடத்தில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் குடிநீர் கேட்டு கோ‌ஷங்களும் எழுப்பினர்.

இந்த மறியல் போராட்டம் காரணமாக சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து உடனடியாக அங்கு போலீசார் விரைந்தனர். அவர்கள் பொதுமக்களை சாலையோரம் அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதற்கிடையே மாநகராட்சி கமி‌ஷனர் மனோகர் அங்கு வந்தார். அவரிடம் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்றும், தட்டுப்பாட்டை போக்க தங்கள் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தினர்.

இதைத்தொடர்ந்து லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார். இதனால் சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல், சாணார்பட்டி ஒன்றியம் வி.எஸ்.கோட்டை ஊராட்சி வையாளிபட்டி மற்றும் வையாளிபட்டி புதூர் கிராமத்தில் கடந்த 4 மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஒரு குடம் ரூ.5–க்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். முறையாக தண்ணீர் வினியோகம் செய்யக்கோரி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று சாணார்பட்டி ஒன்றிய அலுவலத்தை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டனர்.

மேலும் தர்ணா போரட்டத்திலும் ஈடுபட்டனர். இவர்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். அவர்களிடம் சாணார்பட்டி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாராஜமாணிக்கம் பேச்சுவார்த்தை நடத்தினார். 2 நாட்களில் முறையாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்