குறி சொல்பவர் போல பகலில் வீடுகளை நோட்டமிட்டு நகை திருடியவர் கைது

கோவையில் குறிசொல்பவர் போல பகலில் வீடுகளை நோட்டமிட்டு நகை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-07-14 22:30 GMT

கோவை,

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் கடந்த சில நாட்களாக வீடு புகுந்து நகை திருடும் சம்பவங்கள் அதிகமாக நடந்து வந்தது. இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் கொள்ளையர்களை பிடிக்க குற்றப்பிரிவு துணை கமி‌ஷனர் பெருமாள் உத்தரவின் பேரில் சப்–இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையில் ஏட்டு உமா, போலீசார் கார்த்தி, சர்மிளா ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் ஆர்.எஸ்.புரம் பகுதியில் ஒரு நகைபட்டறைக்கு நகை விற்க வந்தவர் மீது சந்தேகம் இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த நபரிடம் விசாரணை நடத்தினார்கள். இதில் அவர் விற்க வந்தது திருட்டு நகைகள் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.

கோவையில் கைதானவர் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியை சேர்ந்த விஜி (வயது 40) என்பது தெரியவந்தது. இவர் மீது திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் பதிவாகி உள்ளது. இந்த வழக்குகளில் போலீசார் தேடுவதால் அங்கிருந்து தலைமறைவான அவர் சில நாட்களுக்கு முன்பு கோவை வந்துள்ளார்.

விஜி பகல் நேரங்களில் குறி சொல்பவர் போல வேடமிட்டு சுற்றித்திரிந்து வீடுகளை நோட்டமிட்டுள்ளார். வீடுகள் முன்பு நின்று குறி கேட்கவில்லையா? என்று சத்தம் போடுவார். அவரது சத்தம்கேட்டு வீட்டிலிருந்து வெளியே யார் வருகிறார்கள்? அந்த வீட்டில் ஆண்கள் யாரும் இருக்கிறார்களா? அல்லது வயதான பெண்கள் இருக்கிறார்களா?. என்று அவர் கவனிப்பார். அப்படி யாராவது வந்தால் அவர்களிடம் குறி கேட்கிறீர்களா? என்று கேட்டு விட்டு சென்று விடுவார். விஜிக்கு குறி சொல்ல தெரியாது. ஆனால் குறி சொல்பவர்கள் அணியும் பாசி மாலைகள் மற்றும் நெற்றியில் குங்குமம் வைத்து யாருக்கும் சந்தேகம் வராத அளவிற்கு நடந்து கொள்வார்.

ஆனால் சில வீடுகளில் யாரும் வரவில்லை என்றால் அந்த வீட்டில் ஆட்கள் இல்லை என்று விஜி தெரிந்துகொள்வார். அந்த வீடுகளில் இரவில் புகுந்து அங்குள்ள நகை மற்றும் பணத்தை அவர் திருடி கைவரிசை காட்டியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்படி விஜி கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் 2 வீடுகளில் நகை திருடியது தெரியவந்தது. இதையடுத்து விஜியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 8 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கொள்ளை சம்பவங்களில் இவருடன் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அதன்பேரில் அவர்களையும் போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்