மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதிக்கக்கோரி கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதிக்கக்கோரி கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் குமார், பொருளாளர் அம்பிகாபதி, கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு மணல் எடுக்க அனுமதி வழங்க வேண்டும், விழுப்புரம் மாவட்டத்தில் மாட்டு வண்டியில் மணல் அள்ள ஏனாதிமங்கலம், தளவானூர் ஆகிய இடங்களில் தனியாக குவாரி அமைக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் போக்குவரத்து ஊழியர் சங்க நிர்வாகி மூர்த்தி, கட்டுமான சங்க மாநிலக்குழு உறுப்பினர்கள் நாகலிங்கம், முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.