குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கிராம மக்கள் முற்றுகை

கிராமங்களில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி தேவகோட்டை யூனியன் அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2017-07-14 22:00 GMT

தேவகோட்டை,

தேவகோட்டை யூனியனுக்கு உட்பட்ட பெரியகாரை பஞ்சாயத்தை சேர்ந்த பெரியகாரை, புதுக்கோட்டை, பனங்காட்டான்வயல் ஆகிய கிராமங்களில் கடந்த ஒரு மாத்திற்கு மேலாக குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு குடிநீர் இல்லாமல் இந்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மிகவும் அவதிஅடைந்து வருகின்றனர். குடிநீர் எடுத்து வருவதற்காக பல கிலோ மீட்டர் தூரம் கிராம மக்கள் நடந்து சென்றுவருகின்றனர்.

இதையடுத்து குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து கிராமங்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தேவகோட்டை யூனியன் அலுவலகத்தில் கிராம மக்கள் 100–க்கும மேற்பட்டோர் முன்னாள் கவுன்சிலர் தென்னீர்வயல் கே.ஆர்.பெரியண்ணன் தலைமையில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுடன் தேவகோட்டை யூனியன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் முடிவில் வருகிற ஆகஸ்டு மாதம் 15–ந்தேதிக்குள் குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்துசென்றனர்.

மேலும் செய்திகள்