களம்பூர் அருகே பெண் உள்பட 2 போலி டாக்டர்கள் கைது
களம்பூர் அருகே டாக்டருக்கு படிக்காமல் சிகிச்சை அளித்த பெண் உள்பட 2 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஆரணி,
களம்பூர் அருகே டாக்டருக்கு படிக்காமல் சிகிச்சை அளித்த பெண் உள்பட 2 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து மருந்து, மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆரணி தாலுகா களம்பூர் அருகே போலி டாக்டர்கள் சிலர் சிகிச்சை அளித்து வருவதாக மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரேவுக்கு புகார் சென்றது. இதையடுத்து போலி டாக்டர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் கிரிஜா மற்றும் அதிகாரிகள் நேற்று களம்பூரை அடுத்த கருங்காலிகுப்பம் கிராமத்தில் திடீர் சோதனை செய்தனர்.அப்போது கருங்காலிகுப்பம் கிராமத்தை சேர்ந்த விசுவநாதன் மனைவி ராஜாமணி (வயது 49) 10–ம் வகுப்பில் தோல்வி அடைந்து விட்டு வீட்டில் வைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தது தெரிய வந்தது. மேலும் அதே பகுதியில் உள்ள மற்றொரு கிளினிக்கில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அங்கு வேலூர் சாயிநாதபுரம், வள்ளலார் நகரை சேர்ந்த சுப்பிரமணி (65) என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக கிளினிக் நடத்தி வருவதும், அவர் பி.யு.சி. (அந்த காலத்து பிளஸ்–1) படித்து விட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் அவர்கள் இருவரும் சிகிச்சைக்கு பயன்படுத்திய மருந்து, மாத்திரைகள், மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து இணை இயக்குனர் கிரிஜா போலி டாக்டர்கள் ராஜாமணி, சுப்பிரமணி ஆகியோரை களம்பூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். மேலும் இதுதொடர்பாக அவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டது.அதன்பேரில் களம்பூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் அல்லிராணி வழக்குப்பதிவு செய்து ராஜாமணி, சுப்பிரமணி ஆகியோரை கைது செய்தனர். பின்னர் போலீசார் இருவரையும் ஆரணி கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.