புதுவை தலைமை செயலகத்தில் சரக்கு, சேவை வரி தொடர்பான ஆலோசனை கூட்டம்
புதுவை தலைமை செயலகத்தில் சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.;
புதுச்சேரி,
மத்திய அரசு அறிவித்துள்ள சரக்கு மற்றும் சேவை வரியை புதுவையில் அமல்படுத்தப்படுவதை மேற்பார்வையிட முதன்மை அதிகாரியாக மத்திய கனரக தொழிற்சாலைகள் துறையின் இணை செயலாளர் விஷ்வஜித் சகாய் நியமிக்கப்பட்டுள்ளார். புதுவை தலைமை செயலகத்தில் உள்ள கருத்தரங்கு அறையில் நேற்று காலை நடந்த சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் புதுவை மாநிலத்தில் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்ட பின்னர் தற்போது உள்ள நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, சாதாரண மக்களிடம் சரக்கு மற்றும் சேவை வரி குறித்த தகவல்களை கொண்டு செல்வதற்கு வசதியாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். பொருட்களின் வரி விவரங்களை தமிழிலும் வெளியிட வேண்டும் என்று நுகர்வோர் சங்கங்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. கூட்டத்தில் வர்த்தக சங்கத்தின் சார்பில் சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பாக கேட்கப்பட்ட சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கிய விஷ்வஜித் சகாய் பேசும் போது, ‘உற்பத்தியாளர்கள் சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்களுக்கு ஏற்ப தங்களுடைய பொருட்களின் விலையை மாற்றி அமைத்து வரி குறைப்பின் பலன் நுகர்வோர்களை சென்றடைய செய்ய வேண்டும்’ என்றார்.கூட்டத்தில் நிதித்துறை செயலாளர் கந்தவேலு, மத்திய கலால்துறை ஆணையர் நிரஞ்சன், மாவட்ட கலெக்டர் சத்யேந்திரசிங் துர்சாவத், வணிக வரித்துறை ஆணையர் ஸ்ரீநிவாஸ், கணக்கு மற்றும் கருவூலத்துறை இயக்குனர் அமிர்தலிங்கம் மற்றும் அதிகாரிகள், வர்த்தக சங்கத்தினர், உற்பத்தியாளர்கள் சங்கத்தினர், நுகர்வோர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.