கே.சி.வேலி குடிநீர் திட்டம் எக்காரணம் கொண்டும் நிறுத்தப்படாது

கே.சி.வேலி குடிநீர் திட்டம் எக்காரணத்தை கொண்டும் நிறுத்தப்படாது என்று மந்திரி ரமேஷ்குமார் திட்டவட்டமாக கூறினார்.

Update: 2017-07-13 23:50 GMT

கோலார் தங்கவயல்

கர்நாடக மாநில சுகாதார துறை மந்திரியும், மாவட்ட பொறுப்பு மந்திரியுமான ரமேஷ்குமார் நேற்று கோலார் தாலுகா காஜூலு தின்னே கிராஸ், சுகூட்டூர் பகுதிகளுக்கு நேரில் சென்று கே.சி.வேலி குடிநீர் திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் காஜூலு தின்னே கிராஸ் பகுதியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பெங்களூருவில் உள்ள கழிவுநீரை சேகரித்து அதனை சுத்திகரித்து கோலார் மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு நீர் நிரப்புவதற்காக கே.சி.வேலி குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டப்பணிகளை கடந்த ஆண்டு நான் தொடங்கிவைத்தபோது, 2017–ம் ஆகஸ்டு மாதம் 15–ந்தேதிக்குள் கே.சி.வேலி குடிநீர் திட்டம் முடிவடைந்து விடும் என்று கூறினேன். அவ்வாறு பணிகள் முடிவடையாவிட்டால், பதவியை ராஜினாமா செய்துவிடுவதாக கூறியிருந்தேன்.

அன்று முதல் இன்று வரை போர்க்கால அடிப்படையில் பணிகள் நடந்து வருகிறது. பல இடங்களில் ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. ஒருசில இடங்களில் தேசிய நெடுஞ்சாலைக்கு உட்பட்ட பகுதியில் வருவதால், கொஞ்சம் காலஅவகாசம் தேவைப்படுகிறது. இதனால், அந்தப்பகுதியை விட்டுவிட்டு வேறு வழியாக இந்த குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற பணிகள் நடந்து வருகிறது.

தற்போது கே.சி.வேலி குடிநீர் திட்டப்பணிகள் முடிய காலதாமதம் ஆகும் என்பதால், எதிர்க்கட்சியினர் என்னை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறி வருகிறார்கள். என்னை ராஜினாமா செய்ய வைத்துவிட்டு இந்த பணியை நிறுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. ஆனால் எக்காரணத்தை கொண்டும் கே.சி.வேலி குடிநீர் திட்டப்பணிகள் நிறுத்தப்படாது. கே.சி.வேலி திட்டத்தின் மூலம் கோலார் மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பியே தீருவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்