கனிம சுரங்க முறைகேடு வழக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகனுக்கு முன்ஜாமீன்

கனிம சுரங்க முறைகேடு வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகனுக்கு முன்ஜாமீன் வழங்கி கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2017-07-13 23:34 GMT

பெங்களூரு,

கர்நாடகத்தில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருப்பவர் கங்காராம் படேரியா. இவர், கடந்த 2007–ம் ஆண்டு கனிமத்துறை இயக்குனராக பொறுப்பு வகித்தார். அப்போது, ‘ஜந்தகல்‘ எனும் கனிம ஏற்றுமதி நிறுவனத்தின் உரிமையாளர் வினோத் கோயலுக்கு போலி ஆவணங்கள் மூலம் சட்டவிரோதமாக சித்ரதுர்கா மாவட்டம் ஒலல்கெரே தாலுகாவில் உள்ள கனிம சுரங்கத்தின் ஒப்பந்தத்தை நீட்டிப்பு செய்து கொடுத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, கங்காராம் படேரியாவின் மகன் ககன் படேரியாவின் வங்கி கணக்கில் வினோத் கோயல் ரூ.10 லட்சத்தை லஞ்சமாக பரிமாற்றம் செய்ததும் தெரியவந்தது.

இதுபற்றிய புகாரை விசாரணை நடத்தி வரும் லோக் அயுக்தா சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் கங்காராம் படேரியாவை கைது செய்தனர். தற்போது கங்காராம் படேரியா ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இந்த முறைகேடு வழக்கில் தொடர்பு கொண்டுள்ள கங்காராம் படேரியாவின் மகன் ககன் படேரியா இந்த வழக்கு தொடர்பாக கைதாகாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு கர்நாடக ஐகோர்ட்டில் மனு செய்தார். அந்த மனு மீது நேற்று முன்தினம் நீதிபதி ரத்னகலா விசாரணை நடத்தினார். அப்போது, லோக் அயுக்தா சிறப்பு விசாரணை குழு விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். சாட்சியங்களை கலைக்க முயற்சிக்க கூடாது எனக்கூறி அவருக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்