ஆம்புலன்ஸ் டிரைவரை, அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்க மறுப்பு 4 நாட்களாக 2 மகன்களுடன் தவிப்பு

வீட்டில் தவறி விழுந்து இடுப்பு எலும்பு முறிந்த ஆம்புலன்ஸ் டிரைவரை, அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்காமல் இழுத்தடித்தனர். 4 நாட்களாக 2 மகன்களுடன் தவித்தார்.

Update: 2017-07-13 23:21 GMT
சேலம்,

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள எம்.செட்டிப்பட்டியை சேர்ந்தவர் பாலு(வயது42). இவர் தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர். இவருக்கு ரோகித்(13), தருண்(12) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார்.

இரு மகன்களும் சேலம் கன்னங்குறிச்சியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி படித்து வருகிறார்கள். கடந்த 8–ந் தேதி அன்று பாலு, வீட்டில் தவறி விழுந்தார். இதனால், அவரது இடுப்பு எலும்பு முறிந்து தவித்தார். உடனடியாக சேலத்தில் விடுதியில் தங்கி இருந்த 2 மகன்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இருவரும் உடனடியாக எம்.செட்டிப்பட்டிக்கு விரைந்தனர். அங்கு நடக்க முடியாமல் தவித்த தந்தையை ஒரு ஆட்டோவில் ஏற்றி 2 சிறுவர்களும் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அங்கு ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக சிகிச்சைக்கு அனுமதிக்காமல் மருந்து மாத்திரைகள் மட்டும் புறநோயாளிகள் பிரிவில் கொடுக்கப்பட்டதாம்.

எங்கு செல்வது? என்று அவர் 2 மகன்களுடன் தவித்து வந்தார். பின்னர் ஆஸ்பத்திரி வளாகத்தில் நோயாளிகளின் உறவினர்களுக்கான காத்திருப்பு அறைக்கு மூவரும் சென்றனர். அங்கேயே கடந்த 4 நாட்களாக பாலு மகன்களுடன் தங்கி விட்டார். டாக்டர்கள் அவருக்கு காப்பீடு திட்டம் இருந்தால்தான் அனுமதிக்க முடியும் என்று கூறினர். ஆனால் பாலு, காப்பீடு அட்டை இல்லை என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஆஸ்பத்திரி மருந்து சீட்டுடன் ஆஸ்பத்திரி வளாகத்தில் நடமாடிக்கொண்டிருந்த 2 சிறுவர்களை சிலர் கேட்டபோது, அச்சிறுவர்கள் ஆஸ்பத்திரியில் நடந்தவற்றை கூறி அழத்தொடங்கினர். எத்தனையோ நோயாளிகளை தான் ஓட்டும் ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு ஆஸ்பத்திரியில் சேர்த்து உயிர்பிழைக்க செய்த அப்பாவை, அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக சேர்க்க மறுக்கிறார்களே என அச்சிறுவர்கள் சோகத்துடன் கூறியதை கேட்டு அனைவரும் ஒரு கணம் கலங்கினர். பின்னர் இது குறித்த தகவல் கலெக்டர் சம்பத், ஆஸ்பத்திரி டீன் கனகராஜ் ஆகியோருக்கு புகாராக தெரிவிக்கப்பட்டது.

அவர்களது உத்தரவின்பேரில், நேற்று பாலு அரசு ஆஸ்பத்திரியில் உள் நோயாளியாக சேர்க்கப்பட்டார்.


மேலும் செய்திகள்