தலைவாசல் அருகே கோவில் கட்டுமானத்துக்கு குழி தோண்டியபோது 9 சாமி சிலைகள் கண்டெடுப்பு
தலைவாசல் அருகே கோவில் கட்டுமானத்துக்கு குழி தோண்டியபோது 9 சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த சிலைகள் அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கப்படுகிறது.
தலைவாசல்,
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே நாவக்குறிச்சி கிராமத்தில் பழமைவாய்ந்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத நைன பூரண நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் சிதிலமடைந்த நிலையில் இருக்கிறது. கடந்த ஒரு ஆண்டாக கிராம மக்கள் கோவிலில் சாமிக்கு விளக்கேற்றி வழிபாடு செய்து வருகின்றனர். இந்தநிலையில் கிராம பொதுமக்கள் சார்பில் கோவில் வளாகத்தில் ஆஞ்சநேயர் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக கடந்த 2 நாட்களாக குழிதோண்டி வருகின்றனர். நேற்று காலை 8.30 மணிக்கு கிராம பொதுமக்கள் குழி தோண்டியபோது திடீரென அதில் பள்ளம் ஏற்பட்டது. அந்த பள்ளத்திற்குள் சாமி சிலைகள் இருப்பதை கண்டு ஆச்சரியம் அடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள், ஆத்தூர் உதவி கலெக்டர் செல்வன், தாசில்தார் கேசவன், தலைவாசல் வருவாய் ஆய்வாளர் யசோதா ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து ஆத்தூர் தாசில்தார் கேசவன் தலைமையில் வருவாய்த்துறையினர் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளத்தை தோண்டி பார்த்தனர். அங்கு சுமார் 5 அடி ஆழ குழிக்குள் 9 சாமி சிலைகள் இருந்ததை கண்டெடுத்தனர். அவை 2¼ உயர கொண்ட ஸ்ரீதேவி, பூதேவி சமேத நைன பூரண நாராயணபெருமாள் சிலைகளும், ஒரு அடி உயரம் கொண்ட கருடாழ்வார், திருமங்கையாழ்வார், சக்கரத்தாழ்வார், நின்றபெருமாள், அமர்ந்தபெருமாள் ஆகிய சிலைகளும், ½ அடி உயரம் கொண்ட பத்மாசன மகாலட்சுமி ஆகிய 9 சிலைகளும் ஆகும்.இந்த 9 சிலைகளையும் குழியில் இருந்து வெளியே எடுத்தபோது அங்கு திரண்ட பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ என பக்தி முழக்கமிட்டனர். பின்னர் காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரை சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கோவிலுக்கு வந்து சிலைகளை பார்த்து சென்றனர். மேலும் பால், சந்தனம், பன்னீர் அபிஷேகம் செய்து வழிபட்டனர். மேலும் தீபாராதனையும் செய்தனர்.
இதுகுறித்து தொல்பொருள் ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், ஆறகளூர் பொன்.வெங்கடேசன் ஆகியோர் கூறியதாவது:–கண்டெடுக்கப்பட்ட 9 சிலைகளும் பழங்கால சிலைகள் ஆகும். அவை 15 அல்லது 16–ம் நூற்றாண்டு விஜயநகர பேரரசு காலத்தில் கட்டப்பட்ட கோவில் சிலைகள் ஆகும். மன்னர் போர்க்காலத்தில் சாமி சிலைகளை கோவில் வளாகத்தில் குழி தோண்டி நிலவறை அமைத்து பாதுகாப்பான பலகை கற்களால் மூடிவைப்பது வழக்கம். மேலும் திருடர்களிடம் இருந்து பாதுகாக்கவும் இந்த நிலவறையில் விலைஉயர்ந்த சிலைகளை பாதுகாத்து வைப்பது வழக்கமாக கொண்டு இருந்தனர். அதேபோல் தான் இந்த கோவிலிலும் நிலவறை அமைத்து சிலைகளை வைத்து இருக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆத்தூர் தாசில்தார் கேசவன் கூறியதாவது:–
நாவக்குறிச்சி நைனபூரண நாராயண பெருமாள் கோவில் பழமைவாய்ந்த கோவில் ஆகும். இந்த கோவில் வளாகத்தில் ஆஞ்சநேயர் சாமிக்கு பீடம் அமைக்கும்போது ஏற்பட்ட பள்ளத்தில் இந்த சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. இந்த சிலைகள் அனைத்தும் கோவிலுக்கு சொந்தமானவை. இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் தகவல் தெரிவிப்போம். அறநிலையத்துறையினரிடம் சிலைகளை ஒப்படைப்போம்.
தொல்லியல்துறை மூலம் எந்த நூற்றாண்டு சிலைகள் என்பது பற்றியும், செப்பு சிலைகளா? அல்லது ஐம்பொன் சிலைகளா? என்பதை தெரிந்து கொள்ள முடியும். அவர்களுக்கும் அறிக்கை வைக்கப்படும்.
இவ்வாறு தாசில்தார் கேசவன் கூறினார்.