கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்-அமைச்சருக்கு புறாக்கள் மூலம் மனு அனுப்பி போராட்டம்

ராசிபுரத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்-அமைச்சருக்கு புறாக்கள் மூலம் மனு அனுப்பி பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-07-13 22:30 GMT
ராசிபுரம்,

ராசிபுரம் நகராட்சியில் 27 வார்டுகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகள், காலிமனைகள் மற்றும் வணிக வளாகங்களை சொந்தமாக வைத்துள்ளனர். தமிழக அரசு அறிவிப்பின் பேரில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு, அவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு மாற்று பட்டாக்கள் வழங்கப்பட்டன. இந்த நிலையில் அப்போதைய நில உடமை திட்ட தனிதாசில்தார் அலுவலக அதிகாரிகளின் கவனக்குறைவால் 4 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்படவில்லை என நீண்ட நாட்களாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இதுபற்றி சம்பந்தப்பட்டவர்கள் பட்டா கேட்டு பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இதை கண்டித்தும், உடனடியாக பட்டா வழங்க கோரியும் ராசிபுரத்தில் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று பா.ம.க.வினர் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு புறா மூலம் மனு அனுப்பும் போராட்டத்தை நடத்தினர்.

போராட்டத்ததிற்கு பா.ம.க. மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பாலு தலைமை தாங்கினார். பா.ம.க. மாநில மாணவர் அணி ஆலோசகர் வக்கீல் விஸ்வராஜ், நாமக்கல் ஒருங்கிணைந்த பா.ம.க. மாவட்ட அமைப்பு செயலாளர் மோகன்ராஜ், மாவட்ட துணை தலைவர் மாரியப்பன், ராசிபுரம் நகர செயலாளர் மணிகண்டன், நகர இளைஞர் அணி செயலாளர் சரவணன், வாஞ்சிநாதன் உள்பட முக்கிய நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

அப்போது 5 புறாக்களின் கால்களில் கோரிக்கை மனுக்களை கட்டி வானில் பறக்கவிட்டனர். மேலும் பட்டாவை விரைவில் வழங்கக்கோரி அவர்கள் கோஷங்களை எழுப்பினர். பின்னர் ராசிபுரம் தாசில்தார் ரத்தினத்திடம் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். 

மேலும் செய்திகள்