குடிநீர் திட்ட பணிகள் தொடங்கும் ஊராட்சிக்கோட்டையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் இடித்து அகற்றம்

குடிநீர் திட்ட பணிகள் தொடங்க உள்ள ஊராட்சிக்கோட்டையில் இருந்த தேவாலயம் இடித்து அகற்றப்பட்டது.

Update: 2017-07-13 22:15 GMT
பவானி,

ஈரோட்டில் கடந்த மாதம் நடந்த நலத்திட்ட பணிகள் தொடக்க விழாவில் பவானி வரதநல்லூர் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்ட பணிகளை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். இதைத்தொடர்ந்து குடிநீர் வடிகால் வாரியத்தால் நேற்று பவானி வரதநல்லூரில் குடிநீர் திட்டப்பணிகளுக்கான பூர்வாங்க பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

குடிநீர் திட்ட பணிகளுக்காக வருவாய்த்துறை சார்பில் 4.05 ஏக்கரும், பொதுப்பணித்துறை சார்பில் 4.05 ஏக்கரும் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் கடந்த பல ஆண்டுகளாக கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயமும் அதன் அருகே கல்லறை தோட்டமும் உள்ளது. அதனால் தேவாலயத்தையும், கல்லறை தோட்டத்தையும் அகற்றிக்கொள்ள வேண்டும் என்று வருவாய்த்துறை சார்பில் தேவாலயத்தின் நிர்வாகிகள் மற்றும் பங்குத்தந்தையிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் பவானி தாசில்தார் குணசேகரன் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு பங்குத்தந்தை இருதய சாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தையின் போது பங்குத்தந்தை இருதயசாமி, பல வருடங்களாக ‘தேவாலயமும், கல்லறை தோட்டமும் இங்குள்ளது. தேவாலயத்துக்கு தனி இடமும், கல்லறை தோட்டத்துக்கு வேறு இடமும் ஒதுக்கித்தந்தால் அகற்றிக்கொள்ள தயார்‘ என்று தெரிவித்தார். அதைத்தொடர்ந்து அதே பகுதியில் தேவாலயம் அமைத்துக்கொள்ள 2½ சென்ட் நிலம் ஒதுக்கித்தரப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட பங்குந்தந்தை இருதயசாமி இதேபோல் கல்லறை தோட்டத்துக்கு வேறு இடம் ஒதுக்கி தந்தால் அகற்றிக்கொள்வதாக தெரிவித்தார்.

பேச்சுவார்த்தை எந்தவித பிரச்சினையும் இன்றி சுமூகமாக முடிந்ததால் நேற்று மாலை தேவாலய கட்டிடம் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.

மேலும் செய்திகள்