நிலமோசடியில் ஈடுபட்டவர் கைது
நிலமோசடியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார். சென்னை ஜவகர்நகர் 5–வது மெயின்ரோட்டை சேர்ந்தவர் குமார் (வயது 61).
திருவள்ளூர்,
இவருக்கு சொந்தமான 19 சென்ட் நிலம் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த அலமாதியில் உள்ளது. அந்த காலிமனையை கடந்த 2012–ம் ஆண்டு குமார் தனது உறவினருடன் சென்று பார்த்தார்.
அப்போது அந்த நிலத்தை வேறு சிலர் பயன்படுத்தி வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று வில்லங்க சான்றிதழ் வாங்கி பார்த்தார். அப்போது சென்னை வியாசர்பாடியை சேர்ந்த வீரச்செல்வம் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து போலி ஆவணம் தயாரித்து ஆள்மாறாட்டம் செய்து அந்த நிலத்தை செங்குன்றம் திரு.வி.க. தெருவை சேர்ந்த வெங்கடேசன் (46) என்பவருக்கு விற்பனை செய்து நிலமோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து வெங்கடேசன் திருவள்ளூரில் உள்ள நிலஅபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிச்சக்கரவர்த்தி உத்தரவின்பேரில் நிலஅபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஞானவேல், சப்–இன்ஸ்பெக்டர்கள் லியோ பிரான்சிஸ், சூர்யகுமார், பிலோமோன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் செங்குன்றம் அருகே பதுங்கியிருந்த வெங்கடேசனை போலீசார் கைது செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான வீரச்செல்வம் மற்றும் அவரது நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.