மாம்பழ சங்க பண்டிகை நிறைவு விழா: கிறிஸ்தவ ஆலயத்தில் திருவிருந்து ஆராதனை

மாம்பழ சங்க பண்டிகை நிறைவு விழாவையொட்டி பாளையங்கோட்டை கதீட்ரல் ஆலயத்தில் நேற்று திருவிருந்து ஆராதனை நடந்தது.

Update: 2017-07-13 20:45 GMT

நெல்லை,

மாம்பழ சங்க பண்டிகை நிறைவு விழாவையொட்டி பாளையங்கோட்டை கதீட்ரல் ஆலயத்தில் நேற்று திருவிருந்து ஆராதனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

மாம்பழ சங்க பண்டிகை

நெல்லை சி.எஸ்.ஐ. டயோசீசன் திருமண்டலம் சார்பில் மாம்பழ சங்கம் மற்றும் ஸ்தோத்திர பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மாம்பழ சங்கம், 237–வது ஸ்தோத்திர பண்டிகை கடந்த 11–ந் தேதி தொடங்கியது.

முதல்நாள் பாளையங்கோட்டை மிலிட்டரி லைன் குளோரிந்தாள் ஆலயத்தில் உள்ள கல்லறைகளில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மற்றும் ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து நூற்றாண்டு மண்டபத்தில் கொடியேற்று விழா, ஆயத்த ஆராதனை, இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.

2–வது நாளான நேற்று முன்தினம் பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் காலையில் மேற்கு சபை மன்ற தலைவர் சற்குணம் தலைமையில் திருவிருந்து ஆராதனை நடந்தது. தொடர்ந்து ஏழைகளுக்கு, கிறிஸ்தவர்கள் தர்மம் வழங்கினர்.

திருவிருந்து ஆராதனை

விழாவின் நிறைவு நாளான நேற்று காலை பாளையங்கோட்டை கதீட்ரல் ஆலயத்தில் ஸ்தோத்திர பண்டிகை ஆராதனை, திருவிருந்து ஆராதனை நடந்தது. தூத்துக்குடி– நாசரேத் திருமண்டல பேராயர் ஜெபசந்திரன் தலைமை தாங்கி, ஆராதனையை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் உப தலைவர் பில்லி, லே செயலாளர் வேதநாயகம், குருத்துவ செயலாளர் ஸ்டீபன் செல்வின்ராஜ், பொருளாளர் தேவதாஸ் ஞானராஜ், ஒருங்கிணைப்பாளர்கள் ஆபிரகாம், டேவிட் அன்பு பிரபாகரன், திருமண்டல நிர்வாகிகள் ஆண்ரூஸ் சாம்ராஜ், அருள்சாமுவேல், டியூக் துரைராஜ், வக்கீல் காமராஜ், ஜீவகுமார் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை மாம்பழ சங்க கமிட்டி நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்