புதிய மதுக்கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் போராட்டம்
புதிய மதுக்கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை,
புதிய மதுக்கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய மதுக்கடை திறக்க முயற்சிநெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள வெங்கடாம்பட்டி கிராமத்தில் அரசு மதுபான கடை திறப்பதற்கு அரசு முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் சமூக ஆர்வலர் பூ.திருமாறன் தலைமையில் வெங்கடாம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த கிராம மக்கள் நேற்று நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள், காந்தி, காமராஜர் படங்களுக்கு சூடம் ஏற்றி வழிபட்டு கோரிக்கை மனுவை தேச தலைவர்களின் படங்களுக்கு அருகே வைத்தனர்.
போராட்டம்பின்னர் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினார்கள். அப்போது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து சமூக ஆர்வலர் திருமாறன் கூறும் போது, “வெங்கடாம்பட்டி பகுதியில் பள்ளிகள், குழந்தைகள் இல்லங்கள் உள்ளன. எங்கள் பகுதியில் உள்ள தனியார் விளை நிலத்தில் அரசு புதிய மதுபான கடையை திறக்க முயற்சி நடக்கிறது. இதை எதிர்த்து அந்த பகுதி கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நாங்கள் காந்திய வழியில் போராட்டம் நடத்தி வருகிறோம். எங்கள் கோரிக்கை ஏற்று அங்கு மதுபான கடையை திறக்க கலெக்டர் அனுமதி வழங்கக் கூடாது“ என்றார்.
தொடர்ந்து மேற்கண்ட கோரிக்கை அடங்கிய மனுவை நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் கொடுத்தனர்.