பண்ட்வால், புத்தூர் உள்பட 4 தாலுகாக்களில் 144 தடை உத்தரவு

பண்ட்வால், புத்தூர் உள்பட 4 தாலுகாக்களில் 144 தடை உத்தரவை வருகிற 21–ந் தேதி வரை நீட்டித்து மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

Update: 2017-07-12 23:42 GMT

மங்களூரு,

தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் அருகே உள்ள கல்லடுக்கா பகுதியில் கடந்த மே மாதம் இருபிரிவினருக்கு இடையே நடந்த மோதலின் போது 2 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதன் தொடர்ச்சியாக அஸ்ரப் என்ற ஆட்டோ டிரைவரும் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார். இதனால் பண்ட்வாலில் பதற்றம் நிலவியது. இதன் காரணமாக பண்ட்வால் தாலுகாவில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ்.பிரமுகரான சரத் மடிவாளா என்பவரும் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார். அவரது இறுதி ஊர்வலத்தின் போது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் விதமாக பண்ட்வால், சுள்ளியா, புத்தூர், பெல்தங்கடி ஆகிய 4 தாலுகாக்களிலும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தட்சிண கன்னடா மாவட்ட கலெக்டர் ஜெகதீஷ் தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

மாவட்டத்தில் தற்போது ஒருவிதமான அசாதாரண சூழ்நிலையை நிலவுகிறது. இதனால் பண்ட்வால், புத்தூர், பெல்தங்கடி, சுள்ளியா ஆகிய 4 தாலுகாக்களிலும் வருகிற 21–ந் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் தேவை இல்லாமல் வெளியே வர வேண்டாம்.

ஒரு இடத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கூட்டமாக கூடி நிற்ககூடாது. பேரணியோ, பொதுக்கூட்டமோ நடத்த அனுமதியில்லை. இந்த தடை உத்தரவு மங்களூரு மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு பொருந்தாது. இந்த தடை உத்தரவுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்