தொடர் குண்டுவெடிப்பு வழக்கு அபுசலீம் தரப்பு வாதம் முடிந்தது
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனை மீதான விவாதத்தில் அபுசலீம் தரப்பு வாதம் முடிந்தது.
மும்பை
இதற்கிடையே தொடர் குண்டுவெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளியான தாதா அபுசலீமின் கூட்டாளி முஸ்தபா டோசா அண்மையில் மரணம் அடைந்தார்.
இந்தநிலையில் மற்றவர்களுக்கான தண்டனை விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வழக்கில் தாதா அபுசலீமுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்றும், மற்றவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் எனவும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது.இந்தநிலையில், அபுசலீமுக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனை பற்றிய இறுதி வாதம் நேற்று தடா கோர்ட்டில் நடந்தது. கோர்ட்டில் அவரது வக்கீல் ஆஜராகி வாதாடினார். அப்போது அபுசலீமை போர்ச்சுக்கல் நாட்டில் இருந்து நாடு கடத்தி கொண்டு வந்தபோது, அவருக்கு மரண தண்டனை எதுவும் விதிக்கப்படாது என்று அந்த நாட்டு கோர்ட்டில் இந்திய அரசு உறுதி அளித்தது.
இந்த உத்தரவாதத்தின்படி அபு சலீமுக்கு 25 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை வழங்க முடியாது.
ஆயுதங்களை சப்ளை செய்வதற்காக மன்சூர் செய்யது அகமது, இப்ராகிம் ஆகியோருடன் அபு சலீம் நடிகர் சஞ்சய் தத் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்த வழக்கில் மன்சூர் செய்யது அகமது, இப்ராகிம் ஆகியோருக்கு தலா 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.நடிகர் சஞ்சய் தத்திற்கு ஏ.கே.56 ரக துப்பாக்கியை கொடுத்த சமீர் ஹிங்கோராவுக்கு இந்த வழக்கில் 9 ஆண்டு சிறை தண்டனை தான் வழங்கப்பட்டது. இவர்களின் பங்கு தான் அபுசலீமுக்கும் இந்த வழக்கில் உள்ளது. எனவே குற்றத்தின் தன்மையை சரிசமமாக தான் கருத வேண்டும்.
குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையின் போது, அபு சலீம் சிறையில் கழித்த 8 ஆண்டு காலத்தை தண்டனை காலமாக கருதி அவரை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என முறையிட்டார். நேற்று நடந்த இந்த வாதத்துடன் அபு சலீம் தரப்பு வாதம் முடிந்தது.