பாசத்துக்காக அழைத்து வந்தேன்: ‘எனது குழந்தைகளை கடத்த வில்லை’ தந்தை உருக்கம்

சென்னை வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சரசு (வயது 27). இவர் சஞ்சய் (10), அஜய் (7), விஜய்பிரகாஷ் (5) என்ற 3 குழந்தைகளுடன், தனது கணவர் குமாரை பிரிந்து விஜய் என்ற வாலிபருடன் வசித்து வருகிறார்.

Update: 2017-07-12 23:00 GMT
வாழப்பாடி,

நேற்று முன்தினம் பள்ளிக்குசென்ற சரசுவிற்கு குழந்தைகள் பள்ளிக்கு வரவில்லை என்ற தகவல் கிடைத்ததால் அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக சரசு வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில், தனது 3 குழந்தைகளை மர்ம நபர்கள் கடத்தி விட்டதாக புகார் கொடுத்தார்.
இதையடுத்து வாழப்பாடி அருகே உள்ள சோமம்பட்டியில் உள்ள சரசுவின் சொந்த ஊரில் போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது கடத்தப்பட்டதாக சொல்லப்பட்ட 3 குழந்தைகளும் தந்தை குமாருடன் இருப்பதை கண்டனர். வாழப்பாடி போலீசார் குழந்தைகளை மீட்டு குமாரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதுகுறித்து வாழப்பாடி போலீசார் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சோமம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குமார், கூலித்தொழிலாளி. இவருக்கும் சரசுக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இத்தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த ஓராண்டுக்கு முன் சரசுக்கும் அதே பகுதியை சேர்ந்த விஜய்(27) என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. 3 குழந்தைகளையும் அழைத்து கொண்டு விஜய்யுடன் சரசு மாயமானார்.

தனது மனைவி மற்றும் மகன்களை அழைத்து சென்ற விஜய், அவர்களை சென்னையில் தங்க வைத்திருக்கலாம் என சந்தேகமடைந்த குமார், சென்னைக்கு சென்று அவர்களை தேடி வந்தார். பின்னர் நேற்றுமுன்தினம் காலை வளசரவாக்கம் பள்ளிக்கு செல்லும் வழியில் காத்திருந்து, அவரது குழந்தைகள் மூவரையும் அழைத்து கொண்டு சொந்த கிராமமான வாழப்பாடிக்கு வந்து சேர்ந்தார். இதுபற்றி போலீசில் குமார் கூறும்போது, பாசத்துக்கு அடிமைப்பட்டு எனது குழந்தைகளை நான் சென்னையில் இருந்து அழைத்து வந்தேன்.

அவர்களை நான் கடத்த வில்லை என உருக்கமுடன் தெரிவித்தார். இதற்கிடையே வளசரவாக்கம் போலீசார் குமாரை பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் நேற்று காலை குழந்தைகள் சஞ்சய், அஜய், விஜய்பிரகாஷ் ஆகியோரையும், தந்தை குமாரையும் சென்னைக்கு வளசரவாக்கம் போலீசார் அழைத்து சென்றனர்.

மேலும் செய்திகள்