கடனை திருப்பி தர மறுத்த பெண்ணுக்கு கத்திக்குத்து வேன் டிரைவர் கைது
ஊத்துக்கோட்டை அருகே கடனை திருப்பி தர மறுத்த பெண்ணுக்கு கத்திக்குத்து விழுந்தது. இதையொட்டி வேன் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
ஊத்துக்கோட்டை,
ஊத்துக்கோட்டை அருகே உள்ள சென்னாங்காரணி கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பாக்கியராஜ். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சசிகலா (வயது 27). அதே பகுதியை சேர்ந்தவர் எழிலரசன் (27). வேன் டிரைவர். இவரிடம் சசிகலா ரூ.2 ஆயிரம் கடனாக பெற்றார். நீண்ட நாட்கள் ஆகியும் கடனை திருப்பி கொடுக்கவில்லை. இதையடுத்து நேற்று முன்தினம் எழிலரசன் சசிகலா வீட்டுக்கு சென்றார். கடனை திருப்பி செலுத்தாத வரை நகரமாட்டேன் என்றார்.
அதற்கு சசிகலா தற்போது என்னிடம் பணம் இல்லை. நேரம் வரும் போது கொடுக்கிறேன் என்றார். இதனால் ஆத்திரம் அடைந்த எழிலரசன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சசிகலாவின் வயிற்றில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.
இதில் படுகாயம் அடைந்த சசிகலாவை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இது குறித்து ஊத்துக்கோட்டை சப்–இன்ஸ்பெக்டர் கோவிந்தன் வழக்குப்பதிவு செய்து எழிலரசனை கைது செய்தார்.போலீசார் எழிலரசனை கைது செய்து ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.