சட்டம்– ஒழுங்கு பாதுகாப்பு குறித்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் டி.ஐ.ஜி. ஆலோசனை

சட்டம்– ஒழுங்கு பாதுகாப்பு குறித்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் ஆலோசனை நடத்தினார்.

Update: 2017-07-12 22:15 GMT

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் சட்டம்– ஒழுங்கு பாதுகாப்பு குறித்து போலீஸ் அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று காலை விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் அனுசுயா டெய்சி எர்னஸ்ட், ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அனைத்து உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது:– மாவட்டத்தில் சட்டம்– ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ரவுடியிச செயல்களில் ஈடுபடுவோரை கண்டறிந்து முன்எச்சரிக்கையாக அவர்களை உடனுக்குடன் கைது செய்ய வேண்டும். அதுபோல் கொலை, கொலை முயற்சி போன்ற தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

மேலும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து விழுப்புரம் வழியாக மதுபாட்டில்கள், சாராயம் கடத்தப்படுவதை தடுக்க 24 மணி நேரமும் மதுவிலக்கு சோதனைச்சாவடிகளில் தீவிர வாகன சோதனை மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து, மதுபாட்டில்கள் கடத்தல், சாராயம் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுவோரை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அதுபோல் நகை பறிப்பு, திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்ற சம்பவங்கள் அதிகம் நடைபெறும் இடங்களில் 24 மணி நேரமும் போலீஸ் ரோந்துப்பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்